காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு மற்றும் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்கள் கதவடைப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 8 மணிமுதல் இரண்டு மணித்தியாலங்களுக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையின் சகல கடைகளும் மூடப்பட்டிருந்ததோடு, சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவரும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை வர்த்தகர்கள் பேரணியாக சென்று கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். வர்த்தகர்களுடன் பொதுமக்களும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரிக்கை விடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.
இந் நிலையில், இராணுவத்தின் வசமுள்ள தமது 9 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ராணுவ முகாமுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரக போராட்டமும் இரவு பகலாக தொடர்கின்றது.