தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் நடராஜ் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறை யீட்டு நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.
மாமனிதர் நடராஜ் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
முன்னதாக மாமனிதர் நடராஜ் ரவிராஜ் கொலை வழக்கு விஷேட ஜூரி சபை முன் விசாரிக்கப்பட்டு, சந்தேகநபர்களான ஐவரும் விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது.
எனினும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை விஷேட ஜூரி சபை முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்வது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த வழக்கின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறும், அந்த வழக்கை மீள விசாரணை செய்யுமாறும் உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஆராய்ந்த இருவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் குறித்த மனு மார்ச் 28 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டனர்.
மேலும், அன்றையதினம் நீதிமன்றத்தில் தகவலளிக்கும் படி, சட்டமா அதிபர் மற்றும் விடுவிக்கப்பட்ட ஐவருக்கும் நோட்டீ ஸ் அனுப்புமாறும், மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது.