யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி எள்ளங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய செல்வராஜா ஜெகன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மைதானத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வழமைபோல் இன்று மாலையும் உதைபந்து விளையாடியுள்ளனர்.
இதன்போது பந்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து பந்தை எடுப்பதற்காக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜெகன் என்ற இளம் குடும்பஸ்தர் இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளார்.
இதன்போது முகாமில் காவல் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய்கள் இருவர் ஜெகனை பிடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதிலிருந்து ஒருவாறு ஜெகன் தப்பி வெளியில் ஓடிவந்த நிலையில், அவரது நண்பர்களும், ஒடி தப்பியுள்ளனர்.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மைதானத்தில் நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக சென்ற ஜெகன் மீது அங்கிருந்த இராணுவத்தினர் அவரைப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்காக ஜெகன் படுகாயமடைந்த நிலையில், அருகிலுள்ள ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிசாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. எனினும் இதனை அறிந்த தாக்குதலை நடத்திய இராணுவத்தினர் ஊறணி வைத்தியசாலைக்கு வந்து பொலிஸ் முறைப்பாட்டை வாபஸ்பெற்றுக்கொள்ளுமாறு ஜெகனை மிரட்டியுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக தென்பகுதி மக்களுடன் தமிழ் மக்களும் பெருவாரியாக வாக்களித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றிய போதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவந்த கெடுபிடிகள் தொடர்ந்தும் அவ்வாறே எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.