பிரான்சு பாரிசின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஓள்னே சூ புவா தமிழ்ச்சங்கத்தின் 18 வது தமிழ்ச்சோலை ஆண்டு விழா 18.02.2017 சனிக்கிழமை 14.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றப்பட்டது. மங்கள விளக்கினை தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலகுமார் அவர்களும், ஓள்னே சூ புவா தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. விசுவநாதன் அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் சார்பாக செயற்பாட்டாளர் திரு. அகிலன் மற்றும் கலைப்பொறுப்பாளர் திரு. காணிக்கைநாதன் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்கள் ஏற்றி வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாணவர்களால் தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. வரவேற்புரையை திருமதி. நல்லையா வாசுகி அவர்கள் வழங்கியிருந்தார். வரவேற்பு நடனம் இடம் பெற்று மாணவர்களின் கலைநிகழ்வுகள், ஆக்கங்கள் நடைபெற்றன.
கிராமிய நடனம், கண்ணன் நடனம், தமிழ் இசைக்கீதம், வாத்திய இசைகள், எழுச்சி நடனங்கள், நாடகங்கள், சுரத்தட்டு, பாம்பு மயில் நடனம், தாளலயம், கவிதா நிகழ்வு, ஆங்கில நாடகங்கள், திருக்குறள், சிறுவர் உரைகள் என பல நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் சிறப்பாக பண்டாரவன்னியன் நாடகமும், சங்கிலியன் நாடகமும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்து. பிரெஞ்சு மொழியிலே நடித்த குழந்தைகள் சிறப்பாக அதனைச் செய்தும் நடித்துக்காட்டி மக்களின் பாராட்டுதல்களையும் கரகோசத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வில் ஊழி என்னும் தலைப்பில் மேடையேறிய நாடகம் தமது நடிப்புத்திறனால் பலரின் கண்களில் கண்ணீரை வரவைத்திருந்தது. மாணவர்களின் ஆக்கங்கள் கொண்ட 18 வது ஆண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக சிறப்பு உரைகள் இடம்பெற்றன. மாணவர்களின் 2015ம் ஆண்டுக்குரியதும், 2016 ம் ஆண்டுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற நேரம் எடுத்துக்கொண்டாலும் ஓள்னே சூ புவா தமிழ்ச்சங்கத்தின் இரண்டு தமிழ்ச்சோலைக் குழந்தைகளின் வெளிப்பாடுகளை காண மக்கள் இறுதிவரை இருந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.