பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப்பெண்கள் அமைப்பு எட்டாவது தடவையாக நடாத்தும் ”வன்னிமயில்” 2017 விருதுக்கான தாயக விடுதலைப்பாடற் நடனப்போட்டியின் இறுதிநாள் 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான ஓன்லி சூ புவா பிரதேசத்தில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
காலை 10.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை 13.01.1994 இல் பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி 2ம் லெப் சுதாஜினியின் தாயார் ஈகைச்சுடரினை ஏற்றிவைத்து மலர் வணக்கமும், அகவணக்கமும் செலுத்தினார்.. தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினர் இவ்ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அதனைத்தொடர்ந்து வன்னிமயில் இறுதிப்போட்டியின் சிறப்பு நடுவர்கள் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளரால் மதிப்பளிக்கப்பட்டனர்.
வன்னிமயில் போட்டி நடுவர்களாக
நாட்டிய கலாமணி, நடனக்கலாவித்தகர் திருமதி. கிருஸ்ணபவானி சிறீதரன் அவர்கள் ( சுவிஸ்)
நாட்டிய கலாமணி, நடனக்கலாவித்தகர் திருமதி. நிமலினி ஜெயக்குமார் ( சுவிஸ்)
கலாஜோதி, நாட்டியபேரொளி திருமதி தனுசா ரமணன் ( ஜேர்மனி ) ஆகியோர் கடமையாற்றினர்.
‘ வன்னிவிருதினை ” தமதாக்கிக் கொள்ளும் வகையில் அதி மேற்பிரிவினரும், அதிஅதி மேற்பிரிவினரும் தாயக விடுதலைப்பாடலுக்கு உயிர் கொடுத்து நடனத்தை வழங்கியிருந்தனர். இப்போட்டிகளில் மொத்தமாக அ, ஆ பிரிவில் 37 போட்டியாளர்களும், அதிஅதி மேற்பிரிவில் 20 போட்டியாளர்களும் பங்கு பற்றி சிறப்பித்தனர். கடந்த 4 நாட்களாக நடைபெற்று முடிந்த போட்டியில் மொத்தமாக 432 போட்டியாளர் பங்கு பற்றி சிறப்பித்தனர்.
நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக சிறப்புரையை ஆசிரியர் திரு. சத்தியதாசன் அவர்கள் ஆற்றியிருந்தார் அவர் தனது உரையில்; எமது எதிர்கால சந்ததியை எமது மண்ணோடும், மொழியோடும், தேசவிடுதலையோடு வைத்திருக்க வேண்டியது கடமை என்பதுடன் இதில் வரும் பொருளாதாரப்பங்களிப்பு தாயகத்தில் எமது மக்களுக்கு உதவிட பயன்படுத்தப்படுகின்றது என்றும் இன்றைய காலத்தில் தொடர்ந்தும் எமது நோக்கத்தை அடைய முன்னெடுக்கப்படும் அனைத்து சனநாயக முன்னெடுப்புகளுக்கும் உதவிட வேண்டும் தேசத்தைநோக்கி முன்னெடுக்கபடும் அனைத்து செயற்பாடுகளும் காலத்தின் தேவைகருதியே செய்யப்படுகின்றது எனவே இவற்றில் முடிந்தளவு எமது மக்கள் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு காலத்தின் தேவைகருதிய பல கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப்பெண்கள் அமைப்பு நடாத்தும் வன்னிமயில் விடுதலை பாடல் நடனப்போட்டியினை நடாத்துவதற்கு பக்கபலமாக இருந்து வரும் தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் கடந்த நான்கு நாட்கள் போட்டியில் கவனத்திற் கொண்ட நிலவரங்களையும், நடன ஆசிரியர்கள், பெற்றோர்கள் தமது குழந்தைகளை எவ்வாறு மிகுந்த கருசரணையுடன் அல்லும் பகலும் பாடுபட்டு கலையில் வளர்த்திருக்கின்றார்கள் என்பதையும், அவர்களுக்கான பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டதுடன் பாலர் பிரிவுக்கான பிஞ்சுக்குழந்தைகள் எவ்வாறு பாடல்களின் வரிகளை மனப்பாடம் செய்து அதற்கு நடனவடிவங்களை கொடுத்திருந்ததையும் இன்னும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் கலை பண்பாட்டுக்கழகத்தின் ஏனைய கலைரீதியாக நடாத்;தப்படும் கர்நாடக சங்கீதப்போட்டியான இசைவேள்வி, தாயகவிடுதலை பாடல் சங்கொலி விருதுக்கான போட்டி, பரதநாட்டியத்திற்கான நிகழ்வான தகதிமிதா, கிராமிய நடனத்திற்கான ஊரகபேரொளி நடனப்போட்டி நிகழ்வுகள் பற்றியும் முன்னெடுப்புகள் பற்றியும் உரையாற்றப்பட்டது. 2017 வன்னிமயில் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிச்சின்னங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நடுவர்களாலும், தமிழ்ப்பெண்கள் அமைப்பினரால் மாணவர்களைப் பயிற்றுவித்த நடன ஆசிரியர் மதிப்பளிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற வெற்றியாளர்களை நடன ஆசிரியர்களே மதிப்பளித்தலினை செய்திருந்தமை 2017 வன்னிமயில் சிறப்பான முத்தாய்ப்பான விடயமாக அமைந்திருந்தது.
முந்நாள் போராளிகளால் மாவீரர் கேணல் பரிதியின் நினைவாக 1 பவுன் தங்கச்சின்னம் ஆண்டுதோறும் வெற்றியாளருக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அவரின் உருவச்சின்னம் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை மாவீரர் கேணல் பரிதியின் தாயார் வெற்றியாளருக்கு அணிவித்து மகிழ்ச்சிப் படுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டில் வன்னிமயிலாக வந்தவர்கள் வர்ணநிறமான புடவையுடன் அழகாக மேடையை அலங்கரித்திருந்ததுடன் தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். வெற்றியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெண்திரையில் காட்சிப்படுத்தப்பட்டதோடு மண்டபம் நிறைந்த கரகோசம் எழுந்தது.
இறுதியாக வன்னிமயில் 2017 செல்வி.ரம்மியா ரவீந்திரன் அவர்கள் அறிவிக்கப்பட்ட போது மண்டபம் கரவொலியால் சிறிது நேரம் மண்டபம் வெற்றிக்களிப்பில் நின்றிருந்தனர். வெற்றிபெற்ற போட்டியாளரை மதிப்பளிக்க 2016 ல் வன்னிமயில் விருதினைப்பெற்றுக்கொண்டவர் அவருக்கான வன்னிமயில் பட்டியையும் அணிவித்து, கிரீடத்தையும் வழங்கியிருந்தார். நடந்து முடிந்த அனைத்து போட்டிகளிலும் சிறப்பான அறிவித்தல்களை தமிழர் கலைபண்பாட்டுக்கழத்தின் அறிவிப்பார்கள் செய்திருந்தனர். அறிவித்தல்களை தங்கீதனன், தமிழவன், ரூபி, குருபரன், யஸ்ரின், விநோச், திருமதி.ஞானசீலி ஆகியோர் சிறப்பாக ஒலிபரப்புச் செய்து நிகழ்வுகளை தொய்வில்லாது கொண்டு சென்றனர். தீபன் வீடியோ சிறப்பாக படம் பிடித்ததோடு போட்டியாளர்களின் விபரங்களை புதிய தொழிநுட்பத்தில் வெண்திரையில் ஒளிபரப்புச் செய்தனர். மேடை அலங்காரத்தினை மிகவும் அழகாக பேபிடெக்கிறேசன் செய்திருந்தனர். மக்களினதும், குழந்தைகளினதும் நிலவரங்களைக் கவனத்திற் கொண்டு பல சுவையான உணவுகளை தமிழீழ உணவகத்தினர் வழங்கியிருந்தனர். நடனமாடியவர்களின் நிழற்படங்களை ரிரிஎன் தமிழ்ஒளி நிறுவனத்தினர் உடனுக்குடனே படச்சட்டங்களில் பதித்து வழங்கியிருந்தனர். வெளியீட்டுப்பிரிவினர் தாயக வெளியீடுகளை விற்பனை செய்திருந்தனர். தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அனைத்துக்கட்டமைப்பினரும் ஓர் ஒருங்கமைப்பில் தத்தமது கடமைகளை செய்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தமது நன்றியை தெரிவித்திருந்தனர். மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும் போட்டி நிகழ்வைக் கொண்டு சென்று இரவு 9.00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் தாரக மந்திரச்சொல்லுடன் போட்டி நிகழ்வு நிறைவு பெற்றது.
வன்னிமயில் 2017 நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் விபரம்
அதி மேற்பிரிவில் ( அ )
1ம் இடத்தை: செல்வி.ஆரண்யா அமிர்தராஜா
2ம் இடத்தை: செல்வி. அதிசயா நல்லையா
3ம் இடத்தை: செல்வி.விவேகா குலநாதன்
அதி மேற்பிரிவில் ( ஆ )
1ம் இடத்தை: செல்வி. சரண்யா மெவுனசிங்கம்
2ம் இடத்தை: செல்வி. விதுசா விஜயவிக்ரம்
3ம் இடத்தை: இருவர் பெற்றுக்கொள்கின்றனர்
செல்வி. அட்சயா புஸ்பாகரன்
செல்வி. உமையாள் வினாசித்தம்பி
அதி அதி மேற்பிரிவில்
1ம் இடத்தை: செல்வி. திவ்வியா சீராளன்
2ம் இடத்தை: செல்வி. செல்சியா சின்னத்துரை
3ம் இடத்தை: செல்வி. நிந்துசா செல்வரதன் செல்வி: சபிதா சிவசுப்பிரமணியம்
2017 தாயக விடுதலைப்பாடற் நடனப்போட்டியின் வன்னிமயில் 2017 விருதினை செல்வி.ரம்மியா ரவீந்திரன் அவர்கள் தமதாக்கி கொண்டார்.