ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான 53 வாகனங்கள் பிட்டகோட்டே ஸ்ரீ ஜயவர்த்தனபுர பிரதேசத்திலிருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனியார் பாதுகாப்பு ஊழியர்களின்
பாதுகாப்புக்கு மத்தியில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான இடமொன்றிலிருந்து இந்த வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார். மிரிஹான பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றின் பேரில் இவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூட்டுறவு சங்கத்தின் குறித்த இடம் வாகன தரிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளமை தொடர்பான தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது வெலிக்கடை பொலிஸாரினால் இந்த இடத்துக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.
குறித்த வாகன தரிப்பிடத்தில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான பல வாகனங்கள் பல மாதங்களுக்கு முன்னர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. புதிய பழைய வாகனங்கள் அங்கிருந்த நிலையில் அந்த வாகனங்கள் எவை தொடர்பிலும் பதிவு புத்தகத்தில் எவ்வித தகவலும் இல்லையென குறித்த வாகன தரிப்பிடத்தின் காவலாளி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் ரஞ்சித் என்ற அதிகாரி இறுதியாக இரு உழவு இயந்திரங்களையும் ஒரு மோட்டார் சைக்கிளையும் இங்கு கொண்டு வந்தார் என அந்த காவலாளி மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் குறித்த வாகனங்களின் திறப்புக்களையும் அங்கு நிறுத்துவோர் உடன் எடுத்துச் செல்வதாகவும் அந்த காவலாளி பொலிஸ் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 34 கார்கள், 13 ஜீப் வண்டிகள், 2 வேன்கள், 2 கெப் வண்டிகளும் அங்கு இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும் குறித்த கூட்டுறவு சங்க உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றுக்கு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரதேசத்தில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று கடந்த 3 வருடங்களுக்கு முன் ஜனாதிபதி செயலகத்திற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. மாதத்திற்கு ஒரு இலட்சம் ரூபா குத்தகைக்கு அவ்வாறு வழங்கப்பட்டது.
அந்த இடத்தினை பொறுப்பிலுள்ள அரச நிறுவனத்துக்கு குத்தகைக்கு கொடுத்த பின் அங்கு என்ன நடக்கிறது என்பது எமக்கு தேவையற்றது. அந்த இடத்தை குத்தகையில் எடுத்த பின் ஜனாதிபதி செயலகம் பூரண பாதுகாப்பான வழங்கியிருந்தது. அதற்கு மேல் எமக்கு எதுவும் தெரியாது என குறித்த கூட்டுறவு சங்கம் சார்பாக கருத்து தெரிவித்தவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று 53 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் மேலும் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லையென புலனாய்வுப்பிரிவு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி செயலக வாகனங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி வரும் புலனாய்வு பிரிவு அந்த செயலகத்துக்கு மொத்தமாக 750 இற்கும் அதிகமான வாகனங்கள் இருந்துள்ளதை கண்டுபிடித்தது. அதில் 84 டிபெண்டர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.