ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதமளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு அரச விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதலாவது விஜயமாக ஜனாதிபதி இந்தியா செல்லவுள்ளார்.
அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு அரச விஜயத்தை மேற்கொள்ள திகதிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அந்த திகதிகளில் இந்திய பிரதமரினால் சந்திப்பில் கலந்துகொள்ள முடியுமா என்பது தொடர்பில் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு ஆராய்ந்துவருகின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுநடத்தப்படவுள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையில் காணப்படும் அரசியல் பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின்போது ஆராயப்படவுள்ளது.
மேலும் இரண்டு நாடுகளின் மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயததின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு அரச விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயமானது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தின்போது இது மீள் உறுதிபடுத்தப்படவுள்ளது.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயமானது மிக முககியத்துவமிக்கமானதாக அமையவுள்ளது. 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு அரச விஜயம் ஒன்றை உத்தியோகபூர்வமாக மேற்கொள்கின்றார். 1987 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கை இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இடைப்பட்ட காலத்தில் 2008 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அது அரச விஜயமாக அமையவில்லை.
அத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு இலங்கையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றபோதும் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அதில் பங்கேற்கவில்லை. மாறாக அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் பொது நலவாய மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
இதனிடையே அரசாங்கததின் பதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட சில தினங்களில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர புதுடில்லிக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன் பிரதமர் நரேந்திர மோடி மறறும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்கு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்தன.
அந்த விஜயத்தின்போது சீன ஜனாதிபதியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின்போது சீனாவினால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமான கொழும்பு துறைமுக நகர் திட்டம் நிறுத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயம் இடம்பெறவுள்ளது.
அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை தற்போது மீளாய்வு செய்துவருகின்றது. மீளாய்வு முடிந்த பின்னரே அதனை தொடர்வதா இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும் என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீன விஜயத்தின்போது சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் விசேடமாக பேசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர் இந்திய மற்றும் சீன நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.