சிறீலங்கா ஆக்கிரமிப்பு படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த பதினேழு நாட்களாக போராடிவரும் முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக மாண வர்களினால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று மதியம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு – கேப்பாபுலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்கு மாறு வலியுறுத்தி கடந்த மாதம் 31 ஆம் திகதிமுதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே குறித்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கு பல்கலைக்கழக தமிழ், சிங்கள மாணவர்கள் குறித்த கவன யீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பொய் வாக்குறுதிகளைக் கூறி தமிழர்களை ஏமாற்றாதே, தமிழ் மக்களை அடக்கி ஒடுக்காதே, வவுனியாவில் மக்களை ஏமாற்றி யது போன்று கேப்பாபுலவு மக்களை ஏமாற்றாதே, எமது நிலம் எமக்கு வேண்டும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களை சுதந்திரமாக வாழ விடு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோச ங்களை எழுப்பினர்