இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்தவேண்டுமெனவும், சிறீலங்கா அரசாங்கத்துக்கு ஐநா கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் கோரி தொடர் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக காணமல்போன உறவுகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 20ஆம் நாள் கிளிநொச்சியில் குறித்த போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்துள்ள காணாமலாக்கப்பட்ட உறவுகள் எதிர்வரும் 27ஆம் நாள் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனிடம் கையளிப்பதற்காக மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தாம் நல்லாட்சி அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் எமாற்றப்பட்டுவிட்டோம் எனக் கவலை வெளியிட்டுள்ள குறித்த மக்கள், தமது உறவுகள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஐநா சிறீலங்காவை வலியுறுத்தவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த எட்டு வருடங்களாக உறவுகளை இழந்து பரிதவிக்கும் தமக்கு, சமூக அமைப்புகள், பல்கலைக்கழக குழுக்கள் என சகலரும் ஆதரவு தந்து தமது போராட்டத்திற்கு வலுசேர்க்க உதவுமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.