இராணுவம் அகற்றப்படாமல் கிட்டுமா தீர்வு! – கந்தரதன்

0
960

navanthurai‘ எனக்கு விசா இனிக் கிடைக்காது…. எங்களை மாதிரி விசா கிடைக்காமல் இருக்கிறவர்களை நாட்டுக்கு அனுப்பிடுவாங்கள். நாட்டில ஆட்சி மாறீட்டுது. அங்கை நிலைமை எல்லாம் வழமைககுத் திரும்பீற்று……” புலம் பெயர் நாடு ஒன்றுக்கு வந்து 6 மாதங்கள் ஆன ஒரு இளைஞனின் ஆதங்கம் இது.
‘ இனி நாங்கள் விசா புதுப்பிக்கமுடியாது…. நாட்டிலை எல்லாம் நல்ல படியா நடக்குது. இதனைக் காரணம் காட்டி எங்களை எல்லாம் நாட்டுக்கு அனுப்பப் போறாங்கள். இனி நாட்டுக்கு போகவேண்டியது தான். தெரியாமல் வீடும் வாய்கிப்போட்டன்…..” புலம்பெயர் நாட்டுக்கு வந்து 6 வருடங்கள் ஆன அகதி அந்தஸ்து கிடைத்த இளைஞர் ஒருவரின் அங்கலாய்ப்பு இது.
‘ மீண்டும் புலிகள் வரப்போகிறார்கள். புலிக்கொடி பறக்கப்போகிறது. இனி நாங்கள் சுதந்திரமாக இருக்கலாம். திருடன் தொல்லை இருக்காது. வழிப்பறி இருக்காது. குழு மோதல்கள், அடிதடி என்று எதுவும் இருக்காது. எங்களுக்கு நல்லகாலம் பிறக்கப்போகுது…..” தமிழர் தாயகத்தில் குடும்பப் பெண் ஒருவரின் எதிர்பார்ப்பு இது.
இவ்வாறுதான் இன்று தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் தமிழ் மக்கள் புலம்புகின்றனர். இதற்கு மூல காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
; நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இவ்வாறுதான் தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழத் தேசியத்தலைவரின் வெளிப்படையான செயற்பாட்டுக்காலத்தில் உருவாக்கப்பட்டு, தமிழீழ கொள்கைகளோடு செயற்பட்டுவந்த அமைப்பு என்பது அனைவரும் அறிந்த உண்மை. அந்தக் காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கும் கருத்துக்களை மக்கள் வேதவாக்காகக் கருதியிருந்தமையும் அனைவரும் அறிந்ததே.
ஆனால், இன்று விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், தாம் இராணுவத் துப்பாக்கிமுனையில் செயற்படுவதாகக் காரணம் காட்டுவதுடன், தமது மனம் போன போக்கில் கருத்துக்களையும் வெளிவிடுகின்றனர். இது புலம்பெயர் சமூகத்தினரை விசனமடைய வைத்துள்ளது.
அவர்களின் கருத்துக்களை வேதவாக்காகக் கோண்டே தாயகத்தில் எமது மக்கள் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்பதே தவிர, தமிழ் மக்கள் மகிழ்ச்சிகொள்வதில் எதுவித அர்த்தமும் இல்லை.
புதிதாகப் பதவியேற்றுள்ள சிறிலங்கா அரசு, தனக்கு ஆட்சிக்குச் சாதகமாகவே புதியவர்களைப் பதவிக்கு அமர்த்திவருகின்றது. இதனையே மகிந்தவும் தனது ஆட்சியின்போது தனக்கு சாதகமான ஆட்களை முக்கிய பதவிகளில் மாற்றம் செய்திருந்தமை நினைவிருக்கலாம். தற்போது, அதே மாற்றங்கள்தான இடம்பெறுகின்றன.
இவர்கள் தமிழ் மக்களுக்கு சாதகமாகச் செயற்படுவார்கள் என்பது முயல்கொம்பு போன்றதே.
இந்நிலையில், ஏற்கெனவே தாம் அரசோடு பேசிவைத்ததுபோல, எல்லாரும் மைத்திரிபாலவுக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களிடையே பிரச்சாரம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், வடக்கிலும், கிழக்கிலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக அராஜகங்களை புரிந்துவந்தவர்களை புதிய அரசாங்க நிர்வாகத்தில் இணைக்கக்கூடாது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்காகவா இவர்கள் மக்களை வாக்குப்போடத்திணித்தார்கள்.
கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வடக்கிலும் கிழக்கிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் மீள் வழங்கப்படுதல், நீண்ட தடுப்பில் உள்ள அரசியல் கைதிகளை விடுவித்தல், வடக்கு கிழக்கில் உள்ள ஆளுனர்கள், பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட ரீதியாக உள்ள அரசாங்க அதிபர்களை மாற்றுதல், மாவட்ட அபிவிருத்தி குழுக்களில் முதலமைச்சருடன், அந்தந்த பகுதிகளில் உள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை இணைத்தலைவராக நியமித்தல் ஆகிய கோரிக்கைகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
அதேநேரம் கடந்த அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களுக்கு புதிய நிர்வாகத்தில் இடம்தரக் கூடாது என்றும், நீண்டகால அரசியல் தீர்வு சம்பந்தமாகக் குழு ஒன்றை உருவாக்கவும் இதன்போது கூட்டமைப்பு கூறியுள்ளது.
இதற்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான குழுவை உருவாக்குவதாகவும், காணி சம்பந்தமாகவும் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமானால் நன்மையே.
சிறிலங்காவில் புதிய அரசுகள் அமைக்கப்படும்போது, தமிழ் மக்களுக்கான தீர்வுகளுக்கு குழு அமைக்கப்படுவதும் அது காணாமல் போவதும் காலம் காலமாக நாம் கண்ட உண்மையே. சிங்கள அரசு, தமிழ் மக்களுக்கு சாதகமான தீர்வை வழங்கும் என்பது வாஸ்தவம்தான்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய மாற்றுக்கருத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை மீண்டும் நாடு திரும்புமாறு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
செய்தி இணையத்தளங்கள் மீதான தணிக்கையை உடனடியாக நீக்குவதுடன் தொலைபேசிகளை இடைமறித்து ஒட்டுக்கேட்டல், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளையும் உடனடியாக கைவிடுமாறும் மைத்திரி கேட்டுள்ளார்.
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுப்போம். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டது, தாக்கப்பட்டது குறித்தும் விசாரணைகள் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இவற்றையும் நடைமுறைப்படுத்தினால் நன்றே. ஆனால், இவர்களை நம்பி புலம்பெயர்ந்த ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் எப்படி நாடு திரும்பமுடியும். இதற்கு யார் உத்தரவாதம் என்பது வேறு.
இது இவ்வாறிருக்க, அமைச்சுப் பதவி எதுவும் தேவையில்லையெனவும் வெளியிலிருந்தே தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தமை அறிந்ததே.
இரா.சம்பந்தன் எம்.பி. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவரின் அலுவலத்தில் சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றை வழங்கவும் அவர் முன்வந்திருந்தார்.
இந்நிலையில் அவரின் அழைப்புக்குப் பதிலளித்த சம்பந்தன் அமைச்சுப் பதவி எதுவும் வேண்டாம் என மறுத்திருந்தார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணையாமல் வெளியிலிருந்தே முழுமையாக ஆதரவு வழங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
தேசிய அரசாங்கம் 100 நாளில் முடிவுக்கு வந்த பிறகு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமையும்போது அதில் அங்கம் வகிப்பது குறித்து அப்போது சிந்திக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழத்; தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கிழக்கில் ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்துள்ள நிலையில் அங்கு ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்காகத் தமிழத்; தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
மாகாண சபையில் 11 உறுப்பினர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ளது. அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஆளும் கட்சியாக அங்கு செயற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழத்; தேசியக் கூட்டமைப்புக்கே நியாயமாக முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பதவிகளைப் பெறுவதிலேயே இவர்களின் கவனம் செல்கின்றது.
இது இவ்வாறிருக்க சிறிலங்கா ஜனாதிபதி பதவியேற்ற மறுகணமே, தமிழக மீனவர்கள் மீது சிறிலங்கா கடற்படைகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன், அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல் நடத்தி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் சிறைக்குள் இருப்பதற்குக் கூட எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
; கடந்த சனிக்கிழமை 9 தமிழ் அரசியல் கைதிகள், கொலைக்குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றப்பட்டதனை அடுத்தே அவர்கள் மீது சிங்களக் காடையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அரசியல் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வடக்கில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படமாட்டார்கள் என்று பாதுகாப்பு சம்பந்தமான இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். அண்மையில், தமது கடமைகளை பொறுப்பேற்ற அவர், கண்டிக்குச் சென்று பௌத்த மதத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்றார்.
இதன்போது வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று, பௌத்த தலைவர்களிடம் அவர் உறுதியளித்துள்ளார். இவ்வாறான செயற்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளமாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்படாமல் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ சிங்களம் என்ன தீர்வைப் பெற்றுக்கொடுக்கப்போகிறது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழ் மக்களுக்கு ஊட்டிய நம்பிக்கையை நடைமுறையில் காட்டுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். சிந்தியுங்கள் செயற்படுங்கள்!

– நன்றி : ஈழநாடு (21.01.2015)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here