படுகொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் படுகொலை சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முழுமையாக மீள்புதுப்பிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
நடராஜா ரவிராஜ் மற்றும் லசந்த விக்கிரமதுங்க ஆகியோரின் கொலைகள் குறித்த தகவல்கள் எமக்கு வந்துவிட்டன. தற்போது ஆவணங்களை தயாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் கூடிய அரசாங்கத்தின் நிறைவேற்றுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் முகமாகவே இந்த செய்தியாளர் மாநாடு நடத்தப்பட்டது.
அமைச்சர் ராஜித சேனாரத்ன அங்கு மேலும் குறிப்பிடுகையில்
கடந்த ஆட்சிக்காலத்தில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளான நடராஜா ரவிராஜ், மகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் படுகொலை சம்பவங்கள் குறித்து விசாரணைகள் முழுமையாக மீள்புதுபிக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படும். இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி தலைமையிலான தேசிய நிறைவேற்றுக்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நடராஜா ரவிராஜ் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் குறித்த தகவல்கள் எமக்கு வந்துவிட்டன. தற்போது ஆவணங்களை தயாரித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நடராஜா ரவிராஜ் என்ற அற்புதமான அரசியல்வாதி தனக்கு தெரிந்த சிங்களத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறிவந்தார். அவரை சிங்கள மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அவர் கொலை செய்யப்பட்டதும் மக்கள் கவலையடைந்தனர். அவரின பிரேதத்தை வைத்து நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தோம். தற்போதைய பொலிஸ்மா அதிபர் அன்று சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக இருந்தார். சிக்கல்களுக்கு மத்தியிலும் எம்முடன் பணிவுடன் நடந்துகொண்டார். ரவிராஜின் கொலை தொடர் பில் எங்களுக்கு தகவல்கள் வந்துவிட்டன. தற்போது விசாரணைகளை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.
அத்துடன் ஜோசப் பரராஜசிங்கம் மறறும் மகேஸ்வரன் ஆகியோரின் கொலைகள் தொடர்பாகவும் விரிவான விசாரணைகள் நடத்தப்படும். முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை புலிகள் கொலை செய்ததாக கூறினாலும் அதில் பாரிய சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாகவும் உரிய விசாரணைகள் நடத்தப்படும். அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதும் நான் களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்புகொண்டு பேசினேன். அவர் எனக்கு நிலையை கூறினார்.
நான் உடனடியாக அப்போதைய அரசாங்கத்திலிருந்து விலகப்போவதாக கூறினேன். அதனை கேள்வியுற்ற அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உடனடியாக என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை மன்னிக்குமாறும் தான் இது தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் கூறினார். என்னை அவர் ஆசுவாசப்படுத்தினார்.
ரவிராஜ் மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் இன்று உயிருடன் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் ஒருமுறை நான் கூறினேன். அதனை தான் ஏற்றுக்கொள்வதாகவும் எனினும் அது இராணுவத்துக்கு விளங்கவில்லை என்றும் அவர் என்னிடம் கூறினார். எனவே இந்த சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.
விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்பந் தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதனை கூறுகின் றோம். இதற்கான விசாரணைக் குழுக்
களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. துரிதமாக இதனை செய்வோம்.