கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தில் யாழ் பல்கலைகழகமும் ஒன்றிணைவு

0
299


முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு மக்கள் தொடர்ந்து 9ஆவது நாளாக முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்துள்ளனர்.

பல இளைஞர்களை திரட்டிக்கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் நேற்றைய தினம் கேப்பாப்புலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது பூரண ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சிறீலங்கா விமானப்படையினர் ஆக்கிரமித்துள்ள தமது சொந்த நிலத்தை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் இன்றுவரை ஒன்பதாவது நாளாக குறித்த போராட்டம் தொடர்கின்றது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பவன், மாணவர் ஒன்றிய தலைவர் அனுஜன், யாழ். பல்கலைக்க ழக கலைப்பீட ஒன்றியத்தலைவர் ரஜீவன் தலைமையில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் வருகைதந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்து மகஜர் ஒன்றினையும் மக்களிடம் வாசித்து காட்டியுள்ளனர்.

இனி வரும் நாட்களில் யாழ்ப்பாணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து சிறீலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்படவேண்டும் என்பதற்காக குரல் கொடுக்கும் விதமாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த மக்களின் போராட்டம் வெற்றிபெற வேண்டுமெனில் அனைத்து தரப்பினரும், அனைத்து மக்களும் இவர்களுக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்றும், முக்கியமாக இளைஞர்களின் ஆதரவு அவசியமானது எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here