என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர், நான் தனியாக இருந்து போராடுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டேன். ஆந்திரா சென்று தண்ணீர் பெற்று கொடுத்தது, ஜல்லிக்கட்டு சட்டம் இயற்றியது, வர்தா புயல் நிவாரணம் போன்றவற்றின்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இது பிடிக்காமல் எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர்.
இறுதியில் கட்டாயப்படுத்தியே என்னிடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கூறி கடிதம் பெற்றனர். அம்மாவின் சமாதிக்கு சென்று அவரின் ஆன்மாவிடம் ஆசி பெற்றுவிட்டு ராஜினாமா கடிதம் தருகிறேன் என்று சொன்னதை கூட அவர்கள் ஏற்கவில்லை. பிறகு போய் ஆசி பெறலாம் என கூறினர். கட்டாயத்தின் பேரில்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தேன்.
ஜெயலலிதாவின் நல்லாட்சிக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது. அவரது வழிநின்று ஆட்சிபுரிபவர்கள் வேண்டும். பன்னீர்செல்வம் என்று இல்லை யாராக இருந்தாலும் சரிதான். மக்களால் விரும்புபவரே முதல்வராக வேண்டும். இதற்காக நான் தனியாக நின்று போராடுவேன். இவ்வாறு ஓ.பி.எஸ் தெரிவித்தார்.