ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் கட்சியின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் என சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.
தமது கட்சியின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே இச் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளரும் உயர்பீட உறுப்பினருமாக யூ.எல்.எம்.என். முபீன் கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும்போது சிறுபான்மை சமூகத்தின் நலன்கள் பாதிக்கப்படாத வகையில் எவ்வாறான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இங்கு விரிவாக விளக்கிக் கூறினார்.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலின் போது சிறுபான்மை மக்களும் குறிப்பாக முஸ்லிம் மக்களும் மிகப் பெரும்பான்மையான வாக்குகளை தங்களுக்கே அளித்திருந்தார்கள் என்பதையும் அமைச்சர் ஹக்கீம் இங்கு நினைவு படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கட்சியின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர மேயருமான சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அரசியலமைப்பு மாற்றத்தின்போது சிறுபான்மையினரதும் தேசியத்தினதும் நலன்களை பாதிக்காத வகையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில், இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சிறந்த அரசியல் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்தச் சூழலை நாமனைவரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சி பேதமின்றி நாட்டின் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்கும் நல்லாட்சிக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் அரசியலமைப்பு மாற்றங்கள் உட்பட அனைத்தும் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்படும். அதில் நீங்கள் சுட்டிக்காட்டிய விடயங்கள் நிச்சயம் கவனத்திலெடுக்கப்படும் என்றார்.
நாட்டில் நல்லாட்சி ஒன்று உருவாக வேண்டும் என்பதற்காக முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்து வாக்களித்து வெற்றியின் பங்காளிகளாகி இருக்கின்றனர். நாட்டில் நல்லாட்சி ஏற்படவும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் வெற்றி பெறவும் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்று தலைவர் ஹக்கீம் தனது நன்றியுரையில் குறிப்பிட்டதாகவும் யூ.எல்.எம்.என். முபீன் மேலும் குறிப்பிட்டார்.