அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ஒருவர் பல காளை களை அடக்கி பரிசுகளை குவித்தார்.
அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 919 காளைகளும், 936 காளையர்களும் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்கள் 150 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு வாடிவாசலில் இருந்து வெளியேறிய மாடுகளைப் பிடிக்க அனுமதிக்கப்பட் டனர்.
காளைகளின் திமில்களைப் பிடித்து அடக்கிய வீரர்களுக்கு உடனடியாக பரிசுகள் வழங்கப்பட்டன. வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளை களுக்காக, அதன் உரிமையாளர் களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அலங்காநல்லூரைச் சேர்ந்த எஸ்.குமரேசன் (23) அதிக பரிசுகளை பெற்றார். இவர் தனியாக நான்கு காளைகளை அடக்கி 2 அண்டா, மின்விசிறி, மிக்சி போன்ற பரிசுகளை பெற்றார். மேலும் சில காளைகளையும் குமரேசன் அடக்கினார். ஆனால் அவற்றை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அடக்கியதாகக் கூறி பரிசு மறுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு நடத்த உறுதுணையாக இருந்த மாணவர்கள், திரைப்பட இயக்குநர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆகியோருக்கு அவனியாபுரம் விழாக் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், மீண்டும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் மதுரை, சென்னை, திருச்சி, கோவை உட்பட மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் அரசு ஜல்லிக்கட்டுக்கான சட்டம் இயற்றியது.
எனவே ஜல்லிக்கட்டு நடைபெற உறுதுணையாக இருந்த மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாணவர்களின் பிரதிநிதிகளான மெரினாவில் போராடிய லெனின், அவனியாபுரத்தில் போராடிய உமாசங்கர் உள்ளிட்ட மாணவர்களுக்கு முதல் மரியாதை செலுத்தப்பட்டது.
அதேபோல ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து குரல் எழுப்பிய திரைப்பட இயக்குநர்கள் அமீர், வ.கவுதமன், வீர விளையாட்டுக் கழகத் தலைவர் ராஜேஷ், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் பி.ராஜசேகரன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
அவனியாபுரம் நாட்டாண்மை, கணக்குப்பிள்ளை உட்பட 4 பேரின் காளைகள் சுவாமி காளைகளாகக் கருதி வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டு காளைகளிடம் அனுமதி கேட்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு, தனியார் மருத்துவக் குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.