புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் பாலியல் வன்புணர்வின் பின் னரான படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையானது விரைவில் யாழ்.மேல் நீதிமன்றுக்கு பார ப்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த வழக்கின் பத்தாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட ராஜ்குமார் என்பவரது நீதிவான் நீதிமன்ற விளக்கமறியல் காலமானது ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில் அவரது விளக்கமறியல் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடித்து அதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவணையிடுவதற்காக வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
இதன்படி நேற்றைய வழக்கு விசாரணையின் போது அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந்தன் வழக்கை நெறிப்படுத்தியதுடன் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி ஜோய் மகிழ்மகாதேவா ஆஜராகியிருந்தார்.
நீதிபதி தனது கட்டளையில், குறித்த வழக்கு நடவடிக்கையின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் உள்ளதுடன் மிக விரைவில் இவ் வழக்கு தொடர்பான குற்றப் பகிர்வு பத்திரமானது சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் அவ் வாறு குற்றப் பகிர்வு பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டால் யார் யாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்து விடும் என குறிப்பிட்டதுடன், இதன் காரணமாக குறித்த பத்தாவது சந்தேகநபரது பிணை விண்ணப்பமானது நிராகரிக்கப்பட்டு அவரை மேலும் ஒரு வருடத்துக்காக விளக்கமறியலில் வைக்கவும் அதனை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவணையிடவும் பணிப்புரை பிறப்பித்திருந்தார்.
இதன்படி குறித்த பத்தாவது சந்தேகநபருக்கு மேலதிக ஒரு வருடத்தில் முதல் மூன்று மாதங்களில் ஒரு மாத காலம் தவணையிடப்பட்டுள்ள நிலையில் எனைய இரண்டு மாத காலத்துக்கு தவணையிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி அன்று மீண்டும் யாழ்.மேல் நீதிமன்றில் முற்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் இவ் விளக்கமறியல் கால எல்லை நீடிப்பு தொடர்பான கட்டளையை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவானுக்கும் அனுப்பி வைக்குமாறு யாழ்.மேல் நீதிமன்ற பதிவாளருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.