எங்கள் நிலங்களை எங்களிடம் தாருங்கள் என கேப்பாப்பிலவு மக்கள் குமுறுகின்றனர்-ரவிகரன்

0
272

இலங்கைத்தீவு பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த தினத்தை சுதந்திரதினமாக கொண்டாட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
முல்லைத்தீவு நகரிலும் இக்கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் முளைக்கத்தொடங்கி உள்ளன.
சுதந்திரம் என்பது சகலவிதமான அடக்குமுறைகளில் இருந்தும் விடுபட்டு எம்மை நாமே ஆளும் நிலையாகும்.
தமிழர் பூர்வீகப்பிரதேசங்களில் சுதந்திரம் என்பது ஏட்டுச்சுரக்காய் ஆகவே உள்ளது. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தாமும் இலங்கையர் என்பதையோ தமிழ்மக்களாகிய நாமும் சுதந்திரம் அடைந்துள்ளோமா? என்பதையோ உணர்வுரீதியாக அனுபவிக்கத்தெரியாதவர்களாயே வாழ்ந்து வருகின்றனர்.
இன்றும் கேப்பாப்பிலவின் மக்கள் பிலக்குடியிருப்பின் விமானப்படைத்தளத்தின் முன்னால் தமது பூர்வீக வாழ்நிலங்களில் சுதந்திரமாய் வாழ்வதற்காக அந்நிலங்களை விடுவிக்கக்கோரி நான்காவது நாளாக பனியையும் வெய்யிலையும் பாராது இரவும் பகலும் பாராது வயோதிபர் இளையோர் குழந்தைகள் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் துறந்து போராடி வருகின்றனர்.
முல்லைத்தீவின் தெற்கு எல்லையில் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி பகுதிகளில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக வரலாறு கொண்ட குடிநிலங்களும் விளைநிலங்களும் மகாவலி அபிவிருத்தி சபையால் சட்டபூர்வமற்றமுறையில் கையகப்படுத்தப்பட்டு இனரீதியாக தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்படும் சிங்கள இனத்தவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள். வயல்நிலங்கள் தென்பகுதிக்குடியேறிகளால் பயிரிடப்படுகின்றன. தென்பகுதியின் செல்வந்தர்களிடையே எமது மக்களின் பூர்வீக நிலங்கள் மாமரச்செய்கைக்காக 25 ஏக்கர் துண்டுகளாக பங்கிடப்படுகின்றன. தென்னிலங்கை குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகநிலங்களில் தமிழ்மக்கள் தமது அன்றாட வாழ்வின் வாழ்வாதாரத்திற்காய் தினக்கூலிகளாய் செல்கின்றனர். மிகவும் கேவலமான நிலையில் எம்மவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்மக்களின் பூர்வீக நிலங்கள் பல காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்நிலங்களுக்காக அரச விலை மதிப்பு திணைக்களத்தால் மதிப்பீடு செய்யப்படுகின்ற பெறுமதி நட்ட ஈடாக வழங்கப்படுமாம். காணி சுவீகரிப்புச்சட்டத்தின் கீழ் தமிழ் மக்களின் பூர்வீகக்குடிநிலங்கள் – 2009 இடப்பெயர்வு வரை அவர்கள் வாழ்ந்த வீடுகள் கட்டாயமாக பறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு நாமும் இலங்கையின் சுதந்திரப்பிரசைகள் என்பதை உணர்ந்துகொள்ளமுடியும்.
நல்லாட்சி அரசின் அரசியல்வாதிகளில் நல்லுள்ளம் படைத்த கண்ணியம் மிக்க அரசியல் தலைவர்கள் சிலர் உள்ளதை நான் அறிவேன்.
அவர்களின் மேலான கவனத்தின் முன் “சியாட்டல்” என்கின்ற செவ்விந்தியர் தலைவனையும் அவனால் வெளியிடப்பட்ட உலகப்புகழ்பெற்ற சியாட்டல் வாசகத்தையும் முன்வைக்க விரும்புகின்றேன்.
“சியாட்டல்” என்கின்ற செவ்விந்தியர் தலைவனிடம் அவனது இனத்தவர்களின் இரண்டு மில்லியன் ஏக்கர் பூர்வீக நிலப்பரப்பை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் டொலர்களுக்கு விலையாக விற்றுவிடுமாறு அமெரிக்கர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. அமெரிக்கர்களின் பலத்தின் முன்னர் சியாட்டலால் முடியாது என்று கூறமுடியவில்லை. மண்ணை நேசித்த அந்த மக்களின் தலைவன் அதற்கு கூறிய பதில்,
“வானத்தையோ பூமியையோ விற்கவோ வாங்கவோ எவ்வாறியலும்? அந்த எண்ணமே எங்களுக்கு புதிரானது.”
“இந்த நிலத்தின் ஒவ்வொருபகுதியும் எங்கள் மக்களுக்கு புனிதமானவை. பளபளக்கும் பைன்மர இலையும் ஒவ்வொரு கரையும் கானகத்தில் உள்ள ஒவ்வொரு பனித்துளியும் ‘கம்’ என்றிரையும் ஒவ்வொரு உயிரினமும் எங்கள் நினைவிற்கும் அனுபவத்திற்கும் புனிதமானவை. மரங்களில் பாய்கின்ற திரவப்பால் செவ்விந்தியர்களின் நினைவுகளை ஏந்திச்செல்கின்றன.”
இவ்வாறுதான் தமிழர்களாகிய நாமும் இயற்கையோடு ஒன்றியவர்கள். இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளாகிய நாமும் இவ்வாறுதான் எமது வாழ்புலத்தை நேசிக்கின்றோம்.
எங்கள் நிலங்களை எங்களிடம் தாருங்கள். எங்கள் முற்றங்களில் முகாமிட்டிருக்கும் உங்களவர்களை விலக்கிக்கொள்ளுங்கள். எங்கள் வயல்களை- எங்கள் விளைநிலங்களை எங்களிடம் மீண்டும் தாருங்கள். அங்கே எம்முன்னோரின் உழைப்பும் உணர்வும் உறைந்து கிடக்கின்றது. எமது அன்றாட வாழ்வை சுதந்திரமாக வாழ எம்மை அனுமதியுங்கள். நாமும் இத்தீவின் சுதந்திரப்பிரசைகள் என உணர விரும்புகின்றோம். நாமும் இத்தீவில் சுதந்திரமாக எங்கள் பூர்வீக நிலங்களில் வாழ விரும்புகின்றோம்.
எப்போது அது நிகழ்கிறதோ அன்று தான் இலங்கையின் சுதந்திரதினத்தை எம்மால் மகிழ்வுடன் அனுபவிக்கமுடியும். அதுவரை சுதந்திரதினம் என்பது என்றும் எமக்கு கரிநாளே. என்று கேப்பாப்பிலவு மக்கள் போராட்டம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here