உயிர்களிடத்து அன்பு செலுத்துதல் வேண்டும் சாரதிகளே கொல்லுதல் பாவம்!

0
4815
அன்பு பற்றி பாரதியார் அழகுபடக் கூறியுள்ளார். பாரதியார் கூறிய அன்பு உயிர்கள் அனைத்திடமும் காட்டப்பட வேண்டும் என்பதுதான்.
மனிதன் மீது மனிதன் செலுத்தும் அன்பு சுயநலமானது. அதை பெருமையான விடயம் என்று யாரும் கூறிவிடக்கூடாது.
மனிதன் மீது மனிதன் அன்பு செலுத்துவது சொந்த நலம் சார்ந்தது அல்ல என்று யாரேனும் வாதிட்டால், மிருகங்கள் தாம் ஈன்ற தம் கன்றுக்குட்டிகள் மீது காட்டும் அன்பும் பறவைகள் கூடு கட்டி குஞ்சு பொரித்து அவற்றுக்கு உணவு ஊட்டி வளர்க்கின்ற அன்பும் மனித அன்பை விஞ்சிவிடும்.
ஆகையால்தான் மனிதன் மனிதன் மீது காட் டும் அன்பு சுயநலமானது. மனிதன் அனைத்து உயிர்கள் மீதும் செலுத்தும் அன்பு தெய்வீகமானது.
சகல உயிர்களிடத்தும் அன்பு செலுத்தக் கூடிய தகைமை மனிதர்களுக்கு மட்டுமே இறைவன் கொடுத்துள்ளான்.
இப்பூவுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகள் மீதும் அன்பு செலுத்துதல் என்பதை எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.
உயிர்க்கொலை என்பது மிகுந்த பாவம். இருந்தும் சிலர் சமயத்தை சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றி புலால் உண்பதற்கு வழி தேடியுள்ளனர்.
இஃது மிகப்பெரும் பாவச் செயல். உண்மையில் உயிர்க்கொலையை மனிதர்கள் செய்தல் பாவம்.
ஆதலால்தான் உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று பாரதி பாடினான். அந்த அன்பை குழந்தைகளிடம் ஏற்படுத்திவிட்டால், அவர்கள் எந்தக் காலத்திலும் அதிலிருந்து விலகார் என்பது பாரதியின் முடிவு.
இருந்தும் பிற உயிர்கள் மீது நாம் அன்பு காட்டுகிறோமா? என்ற சந்தேகம் பல இடங்களில் ஏற்படவே செய்கிறது. வீதிகளில் இறந்து கிடக்கும் நாய்கள், பூனைகள்; வீதி ஓரங்களிலும் சந்தைகளிலும் உணவுக்காக அலையும் நாய்க்குட்டிகள்; பெற்றதாயின் பால் குடிப்பதற்கே உரிமை மறுக்கப்பட்ட பூனைக்குட்டிகள் என்றவாறு மிகப்பெரும் கொடுமைத்தனங்களைக் காணும் போது,
உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்று பாரதி பாடியதும் அதனை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்ததும் எந்த நேரிய விளைவையும் தரவில்லை என்றே கூற வேண்டும்.
இதில் இன்னும் வேதனையைத் தரக்கூடிய விடயம் வீதிகளைக் கடக்கும் பசுக்களையும் காளைகளையும் கன்றுகளையும் வீதியால் வேகமாகச் செல்லும் கனரக வாகனங்கள் முட்டி மோதி அவற்றின் உயிரைப் பறிக்கும் கொடுஞ் செயலாகும்.
வீதிவிடங்கன் என்ற சிறுவன் தேரில் வரும் போது ஒரு மாட்டுக்கன்றைக் கொன்றான் என்ற குற்றத்துக்காக, வீதிவிடங்கனை அவன் தந்தை மனுநீதிச்சோழ மகாராஜன் தேரோட்டிக் கொன்று ஆன் கன்றின் தாய்ப்பசு கதறியது போல கோன் கன்றை இழந்து மனுநீதி அழுது புலம்பினான் என்று புராணத்தில் படிக்கிறோம்.
ஆனால் ஏ9 வீதியில் – புளியங்குளப் பகுதியில் பஸ் வண்டி மோதி பதினைந்து எருமை மாடுகள் உயிரிழந்தன என்ற செய்தி நம் இதயத்தை நெருட வேண்டாமோ.
ஓ! அந்தோ அநியாயம். கொடும் பாவம். அன்புக்குரிய சாரதிகளே உயிர்களிடத்து அன்பு செலுத்துங்கள். சாரத்தியத்தின் முதல் தகைமை உயிர்களிடத்து அன்பு செலுத்துவதாக இருக்கட்டும்.
(நன்றி:வலம்புரி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here