ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் முடிவில் ஏற்பட்ட கலவரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார். அதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது
கடந்த 23ம் தேதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கலைக்க போலீசார், மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடைபெறக் கோரி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று நேற்று சட்டசபையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அதன்படி இன்று விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணை ஆணையம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை செய்யும். அதன் அறிக்கையை 3 மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கும்.