தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் பரிசளிப்புப் பெருவிழா – 2017 

0
685
தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஐக்கிய இராச்சியக்கிளையின் அதிதிறன், தமிழ்த்திறன் மாணவர்களின்; பரிசளிப்பும் வளர்தமிழ் 10, 11, 12 நிறைவு மதிப்பளிப்பும் மிகப்பிரமாண்டமான முறையில் மூன்றாவது ஆண்டாக கடந்த 22;.01.2017 அன்று கரோ நகர பைரன் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கப்பட்டது. பேரவை மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரத்தினம் அவர்களும் கல்வி மேம்பாட்டுப் பேரவை ஐக்கிய இராச்சிய கிளையின் பொறுப்பாளர் திரு முருகுப்பிள்ளை ஞானவேல் அவர்களும் கல்விமேம்பாட்டுக்கிளையின் ஐக்கிய இராச்சியக்கிளையின் ஆசிரியர் பயிற்றுகைப் பொறுப்பாளர் திருமதி தங்கேஸ்வரி கங்காதரன் அவர்களும் மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைத்தனர். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து ஐக்கிய இராச்சியக்கிளையின் பொறுப்பாளர் திரு. முருகுப்பிள்ளை ஞானவேல் அவர்களது வரவேற்புரையுடன் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை மேலாளர் திருமதி நகுலேசுவரி அரியரத்தினம் அவர்களால் சிறப்புரையும் வழங்கப்பட்டது.
14 நாடுகளில் 60,000 மாணவர்களிற்கு மேல் பின்பற்றும் வளர்தமிழ் பாடநூல் பாடத்திட்டத்தினை ஐக்கிய இராச்சியத்தில் தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவையுடன் சேர்ந்து இயங்கும் 92 பள்ளிகளிலிருந்து ஆயிரம் வரையான மாணவர்கள் பரிசளிப்புகளை பெற்றிருந்தனர்.
இவ்விழாவில் முதன்மை நிகழ்வாக சென்ற ஆண்டு (2016) கல்வி மேம்பாட்டுப் பேரவையால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் வளர்தமிழ் 12 நிறைவு செய்த மாணவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பும் இடம்பெற்றது. புலம்பெயர் மண்ணில் அதுவும் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு மாணவர் எந்த தடங்கலும் இன்றி வளர்தமிழ் 12 நிறைவு செய்வதென்பது மிகவும் கடினமான விடயம் பொதுவாக இங்கு தமிழ்மொழி கற்கும் பெரும்பாலான மாணவர்கள் 7ம் 8ம் வகுப்புகளுடன் தங்கள் தமிழ்மொழிக்கான கல்வியை இடைநிறுத்திக்கொள்கின்றனர். அத்தகைய மாணவர்கள் தங்கள் தமிழ்மொழிக்கல்வியை தொடர்ந்து கற்க வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுக்கும் விதமாக இந்த மதிப்பளிப்பு நடாத்தப்பட்டது. மேலும் 654 அதிதிறன் பெற்ற (மதிப்பெண்கள் 90இற்கு மேல்) மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன் வளர்தமிழ் 10, 11, 12 நிறைவு மதிப்பளிப்பாக நூறுவரையான மாணவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் இத்தொகை அதிகரித்தே செல்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது
ஐக்கிய இராச்சியத்தில் கடந்த 30 வருடங்களாக பல தமிழ்ப்பள்ளிகள் இயங்கினாலும் கலை விழாக்களை கொண்டாடி மகிழ்ந்தார்களே தவிர தாய்மொழி தமிழ் கல்விக்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருந்தன இத்தயை ஆண்டு 12 உயர்நிலை எட்ட ஊக்கப்படுத்தவில்லை தமிழ்மொழியை ஒரு தொடர்பு சாதனமாக கருதுகின்ற போதிலும் அதற்கு அப்பால் மொழியின் அடிப்படைப்பண்பை மறந்து போகின்றார்கள். மொழிதான் எமது இனத்தின் அடையாளம் கலாச்சாரத்தின் வெளிப்பாடு சிந்தனையின் சக்தி இதனை உணர்ந்துதான் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை இந்த மதிப்பளிப்பு விழாவை ஏற்பாடு செய்திருந்ததது. இதனை 4000 மேற்பட்ட மக்கள் கண்டு மகிழ்ந்து பாராட்டினார்கள். இது தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் தனித்துவத்தையும் தனிப்பெரும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகின்றது. பங்கேற்ற மாணவர்கள் என்றுமில்லாதவாறு பெரும் உணர்வு கலந்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
இவ்விழாவில் இன்னோர் சிறப்பு 20 வருடங்களுக்கு மேலாக தமிழ்மொழிக் கல்விக்காக தன்னிகரில்லா சேவை புரிந்து வருகின்ற திருமதி தங்கேசுவரி கங்காதரன் அவர்களுக்கு அவர்களின் உயர்ந்த பணியைப் பாராட்டி தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை, தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ‘நற்பணியாளர்” என்ற வெற்றியாரத்தை வழங்கி மதிப்பளித்தது.
அத்துடன் தமிழர்; கல்விமேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சிய கிளையினால் நடாத்தப்பட்ட தமிழ்த்;திறன் போட்டிகளில் (திருக்குறள், கட்டுரை, பேச்சு) முதல் மூன்று இடங்களைப் பெற்ற 104 மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
விழாவில் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தமிழ்த்திறன் போட்டிகளின் பேச்சு, திருக்குறள் போட்டிகளில் முதலாமிடம் பெற்ற மாணவர்களது பேச்சும், திருக்குறளும் விழாவினை மேலும் சிறப்பித்தது.
விழாவிற்கு தமிழர் கல்விமேம்பாட்டுப்பேரவை ஐக்கியராச்சியக் கிளையுடன் தொடர்புடைய 92 பள்ளிகளிலிருந்து 4000 க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தனர். சீரற்ற காலநிலையினையும் பொருட்படுத்தாது ஸ்கொட்லாந்திலிலுள்ள பள்ளிகள் உட்பட பல வெளிமாவட்ட பள்ளிகளிலிருந்தும் பங்கேற்றிருந்தனர்.
கடந்த ஈர் ஆண்டுகளும் இதே மண்டபத்தில் அதிதிறன் மாணவர்களின்; பரிசளிப்பும் ஐக்கிய இராச்சியத்தில் பணிபுரியும் 250 தமிழ் ஆசிரியர்களுக்கு 5, 10, 15 ஆண்டு பணி அடிப்படையில் மதிப்பளிப்பு பட்டயங்களும் நாற்பத்தி மூன்று பள்ளிகளுக்கு 5, 10, 15 ஆண்டு பணி அடிப்படையில் மதிப்பளிப்பு பட்டயங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆண்டு விழாவினை இளம் மாணவர்களே தொகுத்து வழங்கியிருந்தமையுடன் இளையவர்களே முன்னின்று விழாவினை ஒழுங்கமைத்திருந்தனர். அத்துடன் விழாவின் முடிவில் விழாவின் பணியில் ஈடுபட்ட அனைவரும் மதிப்பளிக்கப்பட்டனர்.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இப்பரிசளிப்புப் பெருவிழாவினைப் பார்க்கும் போது ஐக்கியராச்சியத்தில் தமிழ் வாழும் என்பதும் தமிழ் வளர்ச்சிக்காக மாணவ குமுகாயத்திற்கு எடுக்கப்படுகின்ற சிறப்பு நிறைந்த நிகழ்வாகக் காணப்பட்டது.
‘தமிழே எங்கள் உயிர்” ‘வாழ்க தமிழ் வளர்க வளர்தமிழ்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here