வடமாகாண சபை 2ஆவது தடவையாகவும் அபிவிருத்தி சட்டமூலத்தை நிராகரித்தது!

0
288

இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்தி சட்டமூலத்தை வடமாகாண சபை 2ம் தடவையாகவும் நிராகரித்துள்ளதுடன், மாகாண சபைகளின் அதிகாரங்களை தம்வசப்படுத்தும் ஒரு பொறியாகவே இந்த சட்டமூலம் உள்ளது எனவும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர் இச்சட்டமூலம் தொடர்பாக பரிசீலிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 84ஆம் அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்படி சட்டமூலத்தை சபைக்கு கொண்டுவந்து முன்னர் இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் 154 ஜீ-3 கீழ் கொண்டுவரப்பட்டது.
இப்போது அரசியலமைப்பின் 154 ஜீ-5 கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தவிர இந்த விடயத்தில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. கடந்தமுறை நாம் நிராகரித்ததுபோலவே உள்ளது என்றார்.
தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகள் நட ந்து கொண்டிருக்கின்றது. அதேபோல் எமக்கான உரிமைகளை வழங்குவது தொடர்பாக பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.
இதற்கிடையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இலங்கை அரசாங்கம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இத்தனைக்கும் நடுவில் இதனை எதற்காக கொண்டுவர வேண்டும்.
எம்மை பொறுத்தமட்டில் அரசாங்கம் மாகாணசபைகளுக்கு இருக்கும் கொஞ்ச அதிகாரங்களையும் மத்திக்கு மாற்றுவதற்கும், அதிகார பகிர்வை இல்லாமல் செய்வதற்கும், தாம் நினைத்தால்போல் குடியேற்றங்களை நிறுவுவதற்குமன பொறியாகவே இந்த சட்டமூலத்தை உருவாக்கியிருக்கின்றது.
மேலும் இந்த சட்டமூலத்தில் டீ.எஸ்.சேனாநாயக்க வழியில் பலமான இனமாக, பலமான நாடாக என்ற வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் இந்த நாட்டில் ஒரு இனமா வாழ்கிறது?
இதேபோல் நாம் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஐ.நா சபையில் 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2030ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான அபிவிருத்தி இலக்குகளை நாம் ஏற்கின்றோம்.
ஆனால் இந்த சட்டமூலத்தை புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதன் பின்னர், மாகாண சபைகளின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதன் பின்னர் பரிசீலிக்கலாம் என்றார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில்,
ஒரு வழியால் கொண்டுவரப்பட்டு நிராகரிக்கப்பட்ட ஒரு சட்டமூலத்தை அரசாங்கம் மறுவழியால் கொண்டுவந்து நிறைவேற்றப் பார்க்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
இந்த சட்டமூலம் ஊடாக மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கவே அரசாங்கம் நினைக்கிறது என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்து தெரிவிக்கையில்,
மல்வத்து ஓயாவை வடமாகாணத்திற்கும், மொறகஹந்த ஓயாவை கிழக்கு மாகாணத்திற்கும் கொண்டு செல்ல அரசாங்கம் நினைக்கிறது.
இதன் ஊடாக நீர் வரத்து பாதைகள், நீர்தேக்கங்களை மத்திய அரசின் உடமையாக்கி அவற்றில் சிங்கள குடியேற்றங்களை நிறுவ அரசாங்கம் நினைக்கின்றது. அதனை மகாவலி அதிகார சபையின் செயற்பாட்டில் கண்கூடாக பார்கிறோம் என குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர்,
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்வரையில் இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்குவதில்லை. என்ற தீர்மானத்தை எடுக்கலாம் என்றார் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here