Home
ஈழச்செய்திகள் வெளிநாட்டு நீதிபதிகளை வரவழைப்பது குறித்து வடமாகாண சபை ஆராயவேண்டும்.
- வட மாகாண சபையானது வெளிநாட்டு சட்ட நிபுணர்கள், நீதிபதிகளை வரவழைத்து போர்க்குற்றங்கள், படுகொலைகள் குறித்து விசாரணை செய்து அறிக்கை பெறுவதற்கு சட்டத்தில் இடம் இருக்கின்றதா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
அவ்வாறு முடியுமானால் அதனை நெறிமுறைப்படுத்தி உண்மையை உலகுக்கு எடுத்துரைப்போம். நடந்தவற்றை நடந்தவாறே எடுத்துரைப் போம். எமது மக்கள் நீதியைப் பெறவேண்டுமானால் இது ஒன்றே வழியாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமானது நடந்தவற்றை கனவாக எண்ணுமாறு எம்மைக் கருதவைக்க கடினமாக உழைக்கின்றது. அரசியல் ரீதியாக அதனைத் தருவோம் இதனைத் தருவோம் என்று எம் மவருடன் பேரம்பேசுகின்றது. இல்லையென்றால் மஹிந்த வந்து விடுவார் என்று பயம்காட்டிப் பார்க்கின்றனர். ஆனால் அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் மீது கரிசனை இருந்தால் வடக்கில் படையினரின் எண்ணிக்கையை குறைத்து, மக்களின் காணிகளை திருப்பிக்கொடுத்து, மக்களுக்கெதிராக செயற்பட்ட அதிகாரிகளை சேவையிலிருந்து வெளியேற்றி, காணாமல் போனோரது செயலகத்தை அமைத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மன்னார் வட்டக்கண்டல் படுகொலையின் 32ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நேற்று வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் 1956ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து ஒவ்வொன்றாக எடுத்துரைத்த முதலமைச்சர் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்தும் தனது உரையின்போது சுட்டிக் காட்டினார்.
அரசாங்கம் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்க முடியாது. கொடூரப் படுகொலைகள் பற்றி விசாரணை செய்யாத அரசாங்கங்கள், நடந்தவற்றை நடந்ததா என்று ஆராயாமல் நடக்கவில்லை என்று கூறும் அரசாங்கங்கள், எமது நாடு சுதந்திர நாடு வெளியார் உள்ளீடுகள் பெறப்படாது என்று நீதியைத் திசை திருப்பப் பார்க்கும் அரசாங்கங்கள் எவ்வாறு உண்மையான போர்க்குற்ற விசாரணைகளில் ஈடுபட முன்வரப் போகின்றன? வடமாகாணசபை சர்வதேச நீதிபதிகளின் துணை கொண்டு உண்மையறியும் ஆணைக்குழு ஒன்றையோ, செயற்குழு ஒன்றையோ நியமிக்க முடியுமா என்று ஆராய வேண்டும். முடியுமானால் அதனை நெறிமுறைப் படுத்தி உண்மையை உலகுக்கு எடுத்துரைப்போம். எமது மாகாண எதிர்க்கட்சித் தலைவரே இதற்கு பொருத்தமானவராவார் என்றும் முதலமைச்சர் தனது உரைன்போது தெரிவித்துள்ளார்.