ஒகேனக்கல் அருகே 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது: 9 பயணிகள் உடல் நசுங்கி பலி; பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம்!

0
425

oknakkalஒகேனக்கல் அருகே மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் பஸ் உருண்டது. இந்த கோர விபத்தில் 9 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். பெண்கள் உள்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் இருந்து நேற்று காலை 11 மணியளவில் தர்மபுரி, ஒகேனக்கல் வழியாக அஞ்செட்டிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சிவக்குமார் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக பன்னீர்செல்வம் என்பவர் இருந்தார்.

இந்த பஸ், தர்மபுரி பஸ் நிலையத்துக்கு 11.45 மணிக்கு வந்துவிட்டு ஒகேனக்கல்லை அடைவதற்கு முன் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலைப்பாதையில் பஸ் சென்று கொண்டிருந்தது.

மதியம் 1 மணியளவில் மலைப்பாதையில் உள்ள கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஒரு வளைவில் திரும்பும்போது முன்னால் சென்ற வாகனத்தை டிரைவர் சிவக்குமார் முந்திச்செல்ல முயன்றார்.

அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் இடதுபுற தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே, டிரைவர் சிவக்குமார் பஸ்சில் இருந்து கீழே குதித்தார். இதில் அவரது கால் உடைந்தது. பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் சுமார் 3 முறை உருண்டு சென்று பெரிய பாறையில் மோதி நின்றது.

இதில் பஸ்சின் முன்பகுதியும், பக்கவாட்டு பகுதிகளும் நொறுங்கின. கண்ணாடிகள் உடைந்து சிதறின. இருக்கைகள் பெயர்ந்து பயணிகள் மேல் விழுந்து அமுக்கின. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி, ‘அய்யோ அம்மா’ என்று மரண ஓலம் எழுப்பினார்கள். அவர்களில் சிலர் ‘காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்து பார்த்துவிட்டு ஒகேனக்கல் மற்றும் பென்னாகரம் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. அவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

1.சிவசங்கரி (வயது 10), கம்மாளப்பட்டி, தர்மபுரி மாவட்டம், 2.மாதம்மாள் (50), கணவர் பெயர் கோபாலகிருஷ்ணன், கம்மாளப்பட்டி, 3.வெங்கட்டம்மாள் (50), கணவர் பெயர் காளியப்பன், தர்மபுரி அதகப்பாடி, 4.சகாதேவன் (50), மல்லாபுரம், தர்மபுரி மாவட்டம். 5.மணிவண்ணன் (50), தர்மபுரி. 6.காளியப்பன் (55), அதகப்பாடி, 7.மணிகண்டன் (10), பள்ளி மாணவன், தந்தை பெயர் முருகன், தொப்பூர் தொம்பரக்காரன்பட்டி, தர்மபுரி மாவட்டம் ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தர்மபுரி நியூ காலனியை சேர்ந்த நாராயணசாமியின் மகன் சுதாகர் (39), நடப்பன அள்ளியை சேர்ந்த துரைசாமி (60) ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதில் சுதாகர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தார்.

இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 50 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 43 பேர் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த 4 பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்கள்.

விபத்து பற்றி அறிந்ததும் மாவட்ட கலெக்டர் விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அங்கு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.

இந்த கோர விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here