ஜப்பான் தமக்கு கப்பப் பணத்தை செலுத்த தவறினால் தம்மால் பணயக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டுள்ள இரு ஜப்பானியரை கொல்லப்போவதாக ஐ.எஸ்.போராளி குழு அச்சுறுத்தல் விடுக்கும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.எஸ்.போராளிகளுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு உதவி வழங்குவதாக ஜப்பானிய பிரதமர் உறுதியளித்துள்ளமை தொடர்பில் அந்த வீடியோ காட்சியில் தோன்றிய முகமூடியணிந்த நபர் குற்றஞ்சாட்டினார்.
72 மணி நேரத்துக்குள் 120 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கப்பப் பணத்தை செலுத்தாவிட்டால் ஜப்பானிய பணயக்கைதிகள் இருவரையும் கொல்லப்போவதாக அவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
மேற்படி வீடியோ காட்சியை பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்த ஜப்பானிய வெளிநாட்டு அமைச்சு, இந்த அச்சுறுத்தல் உண்மையானால் அதனை மன்னிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே தற்போது மத்திய கிழக்கிற்கான 6 நாள் சுற்றுலாவின் ஒரு கட்டமாக ஜெருசலேம் சென்றுள்ளார்.
இந்நிலையில் மேற்படி பணயக்கைதிகள் தொடர்பான நெருக்கடியை கையாள தனது சுற்றுலாவை இடைநடுவில் நிறுத்தி நாடு திரும்ப ஷினஸோ அபே முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை கெய்ரோ நகருக்கு விஜயம் செய்த ஷின்ஸோ அபே, ஐ.எஸ் போராளிகளுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு 200 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவம் சாராத உதவியுடன் 2.5 பில்லியன் பெறுமதியான இராணுவம் சாரா உதவிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.