காணாமல்போனோர் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளாமல் அவர்கள் உயிரிழந்து விட்டார்கள் அல்லது வெளிநாட்டில் உள்ளார்கள் என பொறுப்பற்ற விதத்தில் அறிவிக்க எவருக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மேற்படி விடயத்தை அக்கறை கொண்டு துருவித்துருவி ஆராய்ந்தால் பல விடயங்கள் கண்டுபிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது எமக்கு மிகவும் சந்தோசமான விடயம்.
இது தொடர்பான விடயங்களை அனைத்தும் கொழும்புக்கு சென்று தான் இதுவரை எமது மக்கள் பெற்று வந்தார்கள். எமது மக்கள் அதன்மூலம் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மொழி, தூரம், தங்குதல் செலவு, அறிமுகமில்லாத சூழலில் தங்கி தொந்தரவு மற்றும் இடைத்தரகர்கள் ஆதரவை நம்பியிருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது எமது மக்களுக்காக இந்த அலுவலகத்தை ஆரம்பித்தமைக்கு அமைச்சருக்கு நன்றிகள்.
நான் வெளிநாடு சென்ற போது புலம்பெயர் மக்கள் நம் திறன் வளர்ச்சி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கலாசார பரிவர்த்தனை ஈடுபடுவதில் ஆர்வமாக உள்ளார்கள். ஆனால் அவர்களை தற்போதும் எமது அரசு பயங்கரவாதிகளாக கருதுவதாக நினைக்கிறார்கள். அவர்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
அவர்களை பயங்கரவாத மனப்போக்குடன் பார்ப்பதை நிறுத்த வேண்டும். அவர்களின் சிந்தனைகள் வேகங்களை அரசு எமது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்.
மேலும் காணாமல் போனவர்களின் உறவு கள் நான்காவது நாளாக போராட்டம் நடத்துகிறார்கள். ஆயுதப் படைகளிடம் நேரடியாக சாட்சிகள் முன்னிலையில் கையளிக்கப்பட்ட நபர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அரசு உறுதியளித்தது. அதை செய்ய வேண்டும்.
ஒரு தாய் தனது மகள்; ஒரு கூட்டத்தில் ஜனாதிபதி அருகில் இருக்கும் புகைப்படத்தை பார்த்திருக்கிறேன் என தெரிவித்திருந்தார். அவ்விடயம் தொடர்பில் துருவித் துருவி ஆராய்ந்திருந்தால் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது வெளிநாடு சென்றுள்ளார் என்று சொல்வது பயனற்றது. சரியான முறையான விசாரணைகள் இல்லாமல் அவர்கள் அனைவரும் இறந்த அல்லது வெளிநாட்டில் போய்விட்டா ர்கள்? என்று கூறுவதற்கு எவருக்கு என்ன உரிமை உண்டு. இது தொடர்பில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்து தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் முன்வைக்கப்பட வேண்டும். மத்திக்குள்ள அதிகாரங்கள் மாகாணத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள்; நம்மை சிறுபான்மையினர் கருதவில்லை. நாம் தெற்கில் உள்ளவர்களுடன் நல்ல உறவை கொண்டுள்ளோம். அதே போன்று தெற்கில் உள்ள அனைவரின் சிந்தனையிலும் மாற்றம் வேண்டும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.