கர்ப்பிணி பெண் படுகொலை: மாற்றுத்திறனாளியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு!

0
144

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை சம்பவம் தொடர்பில், கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனின் வீட்டுக்கு, பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன், இன்று உத்தரவிட்டார்.

இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியாகவுள்ள மாற்றுத்திறனாளியான 12 வயது சிறுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, சிறுவனை அடுத்த வழக்கு தவணையான எதிர்வரும் 8 ஆம் திகதிவரை, சிறுவர் பாதுகாப்பு பாடசாலையில் அனுமதிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டிருந்தார். எனினும், குறித்த சிறுவன் வீட்டை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என அடம்பிடிப்பதாக, பொலிஸார், பதில் நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து, சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் 7 மாத கர்ப்பிணி , 4 வயது குழந்தையின் தாயான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை (24.01.2017), கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் கொள்ளையிடும் நோக்கில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட போதும் உரிய காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை. இதனையடுத்து, மண்டைதீவு பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் சென்ற இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here