முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்துவரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்பட வேண்டும் எனக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவிருந்த நிலையிலேயே, கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக, கொட்டும் மழைக்கு மத்தியிலும் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற ஏற்பா டாகியிருந்தது. எனினும் அங்கு ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, சிறீலங்கா ஜனாதிபதி சென்ற உலங்கு வானூர்தியை தரையிறக்கம் செய்ய முடியாமல் போனது.
கேப்பாப்புலவு நோக்கி பயணித்த உலங்கு வானூர்த்தி அவசரமாக மீண்டும் கொழும்புக்கு திரும்பியதனால் அவரது விஜயம் இரத்துச் செய்யப்பட்டது.
சிறீலங்கா ஜனாதிபதி வருகைதரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும், கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்தனர்.
கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் வாழ்ந்துவரும் தங்களின் சொந்தக் காணிகள் விடுக்கப்படவில்லை என்றும், மாறாக வற்றாப்பளைக் கிராமத்தைச் சேர்ந்தவர்களின் காணிகளே விடுவிக்கப்படும் பகுதியில் உள்ளதாகவும் கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கும் சில உறுதிக் காணிகள் கேப்பாப்புலவுப் பகுதியில் உள்ளதோடு, அவையும் விடுவிக்க ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிமுதல் கேப்பாப்புலவு பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஒன்றுதிரண்ட 40 பேர், இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.