யாழ்ப்பாணம் இணுவில் மற்றும் கோண்டாவில் பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் இன்று (20) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பில் தொடர்ச்சியாக நியூஸ்பெஸ்ட் சுட்டிக்காட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் – சிவன் கோவில் முன்பாக இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இணுவில் மற்றும் கோண்டாவில் பகுதிகளிலுள்ள வைத்தியர்களும் பொதுமக்களும் இணைந்து இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிணறுகளில் எண்ணெய் கலந்துள்ளமைக்கு தீர்வு எட்டப்படாத பட்சத்தில் தாம் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள கிணறுகளிலும் கலந்து வருவதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.