வடமராட்சியில் இருந்து முகவர் ஊடாக சுவிஸ் நாட்டிற்கு சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கரவெட்டி மத்தியைச் சேர்ந்த மனோகரன் இரவிச்சந்திரன் (வயது 22) என்ற விசேட தேவையுடைய இளைஞன் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதியன்று 16 இலட்சம் ரூபாவினை முகவர் ஒருவரிற்கு வழங்கி இலங்கை விமான நிலையத்தில் இருந்து ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார்.
அங்கு சிராலியோன் எனுமிடத்தில் தங்கி நின்ற நிலையில் சுவிஸ் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்த முகவர் இழுத்தடிப்பு செய்து வந்த நிலையில் மேற்படி இளைஞர் முகவருடன் முரண்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து முகவர் அவ் இளைஞரை தாக்கிய நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக இங்குள்ள உறவினர்களிற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் மரணமடைந்துள்ளதாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கிருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உறவினர்களினால் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று நேற்று திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு வத்தளையைச் சேர்ந்த முகவரொருவர் மற்றும் கொக்குவிலை சேர்ந்த மற்ரொரு முகவரூடாகவே பிரஸ்தாப இளைஞன் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதாயின் பதினைந்து இலட்சம் ரூபாய் பணத்தினை அனுப்பி வைக்குமாறு அங்கிருந்து கோரப்பட்டிருக்கிறது.
இதேவேளை இலங்கையில் இருந்து சென்ற பல இளைஞர்கள் ஆபிரிக்காவில் நிர்க்கதியான நிலையில் இருப்பதாகவும் அங்கிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.