மிழர்களின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்த புரட்சி போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரையில் 5-வது நாளாக இன்றும் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உச்சநீதி மன்ற தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு புரட்சி தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பெரும் எழுச்சியாக காட்டு தீ போல் பரவி கொண்டிருக்கின்றன.
ஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. அதேபோல், சேலம், திருச்சி, கோவை, புதுச்சேரி, கடலூர் என அனைத்து நகரங்களிலும் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் குடும்பம் குடும்பமாக திரண்டுள்ளனர். கடும் வெயிலிலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் இரவு பகல் பாராமல் விடிய விடிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.போராட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு வருகின்றனர். சென்னை மெரினாவை நோக்கி குடும்பம் குடும்பமாக மக்கள் வெள்ளம் படையெடுத்து வருகிறது.
ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளிக்கின்றன.இரவு பகல் பாராமல் நடைபெற்று வரும் உணர்வுபூர்வமான இந்த போராட்டம் 5வது நாளை எட்டியுள்ளது. வாடிவாசல்கள் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப் பாயும் வரை தமிழினத்தின் இந்த வரலாற்று போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை!
‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, தமிழக, எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக, ராஜினாமா செய்ய வேண்டும்’ என, மாணவர்கள் வலியுறுத்தினர்.
மெரினா போராட்டத்தில், மாணவர்கள் பேசியதாவது: உலகில், பால் உற்பத்தியில், நம்நாடு சிறந்து விளங்குகிறது. இதனால், வெளிநாட்டு சோயா பால் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகம், இங்கு எடுபடாமல் போனது. அதனால், நம்நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் திட்டத்தில், ‘பீட்டா’வை கருவியாக கொண்டு, அந்நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. அதன் ஒருபடி தான், ஜல்லிக்கட்டு தடை. ஜல்லிக்கட்டு என்பது,
தமிழனின் அடையாளம்; உரிமை; பாரம்பரியம். அதை தடை செய்ய நடக்கும் சதிக்கு, மத்திய அரசும் மவுனம் சாதிக்கிறது. தமிழரின் உணர்வுகளை, அங்கு வெளிப்படுத்தும் கடமை, தமிழக, எம்.பி.,க்களுக்கு உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த, எம்.பி.,க்கள், பதவிக்கு ஆசைப்பட்டு, தமிழன் என்ற உணர்வை இழந்து விட்டனர். எனவே, தமிழன் என்ற உணர்வு உள்ள தமிழக, எம்.பி.,க்கள், ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்து, ஜல்லிக்கட்டு ஆதரவை நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.