நிலவில் கடைசியாக நடந்த மனிதனான அமெரிக்க விண்வெளி வீரர் ஜின் செர்னர் தனது 82 ஆவது வயதில் மரணமடைந்தார்.
இவரது மரணம் பெரும் இழப்பு என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா குறிப்பிட்டுள்ளது. நிலவுக்கு இரு முறை சென்ற மூன்று பேரில் ஒருவராக இருக்கும் செர்னர் 1972 இல் நிலவின் மேற்பரப்பில் நடந்ததே மனிதன் கடைசியாக அங்கு கால் பதித்த சந்தர்ப்பமாகும்.
நிலவில் அவர் கடைசியாக: “நாம் வந்தது போன்று திரும்புகிறோம். இறைவன் நாடினால் முழு மனித குலத்தினதும் எதிர்பார்ப்போடு அமைதியை எடுத்து நாம் மீண்டும் வருவோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்போது அவர் அப்பல்லோ விண்கலத்தின் தலைமை விண்வெளி வீரராக செயற்பட்டார். அமெரிக்கா ஆகக் கடைசியாக நிலவுக்கு மனிதர்களை அனுப்பிய விண்வெளிப் பயணமும் அதுவாகும்.
இதுவரை பன்னிரண்டு பேர் நிலவில் கால்பதித்திருப்பதோடு அதில் ஆறு பேர் மாத்திரமே தற்போது உயிருடன் உள்ளனர்.
சுகாதார பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த செர்னர் கடந்த திங்கட்கிழமை மரணித்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.