அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை சென்னையிலும் போராட்டம் தொடரும் என்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அறிவித்துள்ளனர். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி சாலை மறியல் போராட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் ஒன்று கூடியுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மாணவர்கள் போராடும் பகுதி மெரினா கடற்கரை சாலை என்பதால் போராட்டம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு கடற்கரை சாலையின் சர்வீஸ் சாலையை ஒட்டிய பகுதியில் அமர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் போராட்டம் செய்வது அந்த சாலை வழியாக செல்லவிருக்கிற முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தெரியக் கூடாது என்பதற்காக பேருந்துகளை நிறுத்தி மறைத்துள்ளனர் போலீசார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர் மாணவர்கள். மேலும், அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் சென்னை மாணவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.