மெய்ப்பொருளை அறியாதவரால் இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது என்பதே உண்மை. இத்தகையவர்களை வஞ்சகர்களும் நேர்மையற் றவர்களும் ஏமாற்றி விடுவர்.
எனவேதான் உண்மைப் பொருளை அறிதல் அவசியமாகின்றது. இருளில் இருந்து ஒளிக்குச் செல்லுதல். பொய்யில் இருந்து மெய்யிற்குச் செல்லுதல் என்பதே தத்துவம்.
எனினும் எங்களைப் பொறுத்தவரை நாம் இன்னமும் மும்மலங்களால் பீடிக்கப்பட்டு உண்மை எனும் ஒளியைக் காணவும் அதனை அடையவும் முடியாதவர்களாக தத்தளிக்கின்றோம்.
இதுவே நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் காரணமாகின்றது. எங்களுக்கு நடந்த அத்தனை ஏமாற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் மெய்ப்பொருள் எதுவென அறிய முடியாத அஞ்ஞானம் எங்களிடம் இருப்பதன் விளைவு தான் இவை எல்லாம்.
எனவே இன்று பிறக்கின்ற தை மகள் எங்கள் அறியாமையை நீக்கட்டும். இருளில் இருந்து ஒளிக்கு எம்மை வழிநடத்திச் செல்லட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறந்தால் வழி பிறப்பது எங்ஙனம்? இங்குதான் ஒளியின் வீச்சு தெரிகிறது.
மார்கழி என்பது மழையும் குளிரும் கொண்ட மாதம். மாரி பொழிந்து ஆறு, குளம், வயல் எல்லாம் நீர் நிலையாகி மார்கழி மாதம் முழுமையும் மழைத் தூறல் என்ற சூழ்நிலை தைப் பிறப்போடு மாற்றம் அடைகிறது.
கதிரவனின் ஒளி பளிச்சிடுகிறது. இருள் அகலுகிறது. அஞ்ஞானம் எனும் இருள் அகன்று ஒளியாகிய மெஞ்ஞானம் ஏற்படுகிறது. இதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர் எனக் கூறி முடிக்கலாம்.
இருந்தும் இன்றைய காலச் சூழ்நிலையில் மார்கழி மாதத்தில் மழையே இல்லை கடும் வெயில் அப்படியானால் மார்கழி மாதத்திலேயே வழி பிறந்து விடுகிறதல்லவா? என்று நீங்கள் கூறுவதும் கேட்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதில் விவ சாயிகள் தமது பயிர்ச்செய்கையின் விளைச்சலை அறுவடை செய்து வீட்டிற்கு கொண்டு வந்து அதனை தங்கள் உணவுத் தேவைக்கும் மேலதிகத்தை வாணிபத்துக்குமாக ஆக்கும் போதுபட்ட கஷ்டங்கள் நீங்குகிறதல்லவா?
ஆகையால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றனர். நம் முன்னோர் எனலாம். இதிலும் உடன்பாடில்லை என்றால்,
வயலில் நெல் விதைத்து அந்த நெல்லை அறு வடை செய்வது தை மாதத்தில் என்பதால் நெல் அறுவடைக்குப் பின் வழி ஏற்படுகிறது. ஆகையால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் சொல்லியி ருக்கலாம்.
இங்கு எது சரியானது என்ற விவாதம் தேவையற்றது. மேற்குறிப்பிட்ட மூன்று கருத்துக்களுமே பொருத்தமானவை தான்.
இருந்தும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஒளியின் பாற்பட்டு கூறப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்திருக்கமுடியாது. ஆக, இன்று பிறக்கின்ற தை திங்களோடு எங்களுக்கு வழி பிறக்கட்டும் பிறக்கின்ற தையில் எங்கள் அனைவரிடமும் மெய்ப் பொருள் எதுவெனக் கண்டறியும் பேராற்றல் ஏற்படட்டும்.
உண்மையை கண்டறிந்து விட்டால் அதுவே ஒளி.
ஆகையால் அறியாமை எனும் இருள் அகன்று மெய்ஞானம் எனும் போரொளி பரவட்டும். தைத் திங்கள் அதற்கு வழி செய்யட்டும்.