நெதர்லாந்து நாட்டில் சக மாணவர்களின் கேலிப்பேச்சு மற்றும் தொந்தரவுக்கு உள்ளாகி மன விரக்தியடைந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாத்திரைகளை உட்கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் கொண்டான்.
யாழ்ப்பாணம் மீசாலை கிழக்கை சொந்த இடமாகவும் நெதர்லாந்து Heerlen என்ற இடத்தில் வசித்து வந்தவருமாகிய செல்வம் தாருக்ஷன்( வயது15) என்ற மாணவனே உயிழந்தவராவார். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் இவரது குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி நெதர்லாந்து நாட்டிற்கு வந்தனர் .
அதன் பின்னர் அவன் அங்குள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்தான் . சற்றுப் பருமனான தோற்றம் கொண்டதால் ஒன்றாகக் கல்வி கற்கும் மாணவர்கள் இவனை கிண்டல் , தொந்தரவு செய்து வந்ததாக கூறப்பட்டது . கடந்த டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக பாடசாலை மூடப்பட்டு மீண்டும் கடந்த திங்கட் கிழமை ஆரம்பமாகியது.
இந்த நிலையில் தான் மீண்டும் பாடசாலைக்கு செல்ல மனம் உடைந்த நிலையில் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. இவர் தன் இறுதி வாழ்க்கையை முடிவு செய்வதற்காக இணையத்தின் மூலம் பதிவுசெய்து மாத்திரைகளை பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.
மேலும், தற்கொலை செய்துகொண்ட குறித்த நபரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் (instagram) பதிவிட்டு மோசமாக எழுதியிருந்ததாக நெதர்லாந்து நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த 7 வாரங்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்தும் அவர்கள் அக்கறை எடுக்கவில்லை, எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். அவனது பாடசாலை நிர்வாகத்துடன் கதைத்தும், அவர்களும் கவனம் எடுக்கவில்லை என்றனர்.
தருக்சன் பாடசாலை சென்ற காலங்களில் அங்கு தன்னோடு யாரும் பேசுவதில்லை என்று கவலைப் பட்டிருக்கிறான். ஆனால், வீட்டில் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததாக சகோதரி சரண்யா தெரிவித்தார்.
தாருக்ஷன் தற்கொலை செய்வதற்கு முன்னர் பிரியாவிடை கோரும் கடிதம் எழுதி வைத்திருக்கிறான். இந்தத் தகவல் லிம்பூர்க் பிராந்திய ஊடகங்களில் வந்துள்ளது.
(எரிமலைக்காக நெதர்லாந்தில் இருந்து பிரதீபன்)