எமது உரிமையை கேட்பது இனவாதமல்ல. அதனை மறுப்பதே இனவாதம். எமது உரிமையை நாமே உரத்துச்சொல்ல எழுக தமிழ் மூலம் ஒன்றிணைவோம் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் மக்கள் எழுச்சிபேரணி நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு, தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காகவும் அவர்களது நலன்களுக்காகவும் ஜனநாயக ரீதியாக பாடுபடுவது அதனுடைய முக்கிய பணியாகும்.
எழுக தமிழ் ஊடாக வட கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகளை இந்நாட்டு அரசுக்கும் சர்வதேசத் துக்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கும் உரத்துச் சொல்ல முடியும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் திடமான நம்பிக்கை.
இப்போது தலைவர்களை முந் திக்கொண்டு தீர்மானம் எடுக்கவும் செயற்படவும் மக்கள் முற்படுகின்றனர். ஏனெனில் தலைவர்களுடைய தீர்மானங்களும் செயற்பாடுகளும் தடுமாற்றம் நிறைந்து இருப்பதாக மக்கள் எண்ணுகின்றார்கள் .
எனவே தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாங்களும் முழுமையான பங்களிப்பைக் செய்ய வேண்டும் என மக்கள் முன்வரத் தொடங்கியுள்ளனர். அதன் வெளிப்பாடுதான் தமிழ் மக்கள் பேரவையின் தோற்ற மும் எழுக தமிழ் பேரணி நிகழ்வும்.
கேட்காமல் எதுவும் கிடைப்பதில்லை, கேட்பது நமது தலையாய கடமை. எங்களுக்கு எது தேவை என்பதை நாம்தான் சொல்லியாக வேண்டும் .அதையும் உரத்துச் சொல்லுதல் வேண்டும் .இதற்கான அரிய சந்தர்ப்பம் ஒன்றுதான் கிழக்கில் மட்டக்களப்பிலே நடை பெறவுள்ள எழுக தமிழ் பேரணி நிகழ்வு.
எனவே அந்த பேரணி நிகழ்வில் இன, மத, கட்சி வேறுபாடுகளை விடுத்து வடக்கு கிழக்கை சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என தமிழ் மக்கள் பேரவை பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.