தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அதற்கு மக்களிடமிருந்து வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாகவும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது அவ்வாறான சூழல் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டம், தேவிபுரப் பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது எனவும், அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவித்த அவர், மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியும் போதுமானதாக இல்லையெனவும் தெரிவித்தார்.
அத்துடன், யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களும், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக வடக்கில் வாழ்வதாகவும் தெரிவித்த அவர் இவர்களின் நலன் கருதி பாரிய சுகாதார வேலைத்திட்டங்களை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்