வடக்கு மாகாண சபையின் அமர்வுகள், உறுப்பினர்கள் ஆற்றுகின்ற உரைகள், எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பில் ஓர் ஆரோக்கியம் இருப்பதாகத் தெரியவில்லை.
வடக்கு மாகாண சபையின் ஆரம்ப கட்டப் போக்குகள் திருப்தி இல்லாமல் இருந்தபோதிலும் அனுபவக்குறைவின் காரணமாக உறுப்பினர்கள் சபை அமர்வுகளை பெறுமதியாக்கத் தவறுகின்றனர் எனக் கருதப்பட்டது.
எனினும் காலநகர்வில் அனுபவமும் முதிர்வும் ஏற்பட வடக்கு மாகாண சபையின் இயங்கு நிலை சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நம்பிக்கைக்குரியதாக அமையவில்லை என்பதே உண்மை.
வடக்கு மாகாண சபையில் சில உறுப்பினர்கள் ஆற்றுகின்ற உரைகளைப்பார்க்கும் போது அவர்களிடம் ஒரு தெளிவின்மை இருப்பது தெரிகின்றது. அது மட்டும் அன்றி கூற வந்ததை தெளிவாக கூறுவதில் இருக்கக்கூடிய இடர்பாடுகள் என்பனவும் சபை அமர்வுகளின் கனதியை குறைத்துவிடுகின்றது.
தவிர, ஒவ்வொரு அமர்விலும் முரண்படுவதும் எதிர்வாதம் புரிவதுமே வழமையாக அமையும் போது, எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போகின்றது.
உண்மையில் வடக்கு மாகாணம் சமூக, பொருளாதார அரசியல் கட்டமைப்புகளை கட்டியெழுப்பப் பாடுபட வேண்டும். முதலமைச்சர், சபைத் தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எங்கள் தமிழ் மண்ணில் எத்தனை அபிவிருத்தித் திட்டங்களை, சமூக நலத்தொண்டுகளை, விவசாய உற்பத்தி அதிகரிப்புக்களை, கடல் வள உற்பத்திகளை மேல் எழச் செய்யலாம் எனச் சதா சிந்திக்க வேண்டும்.
இதைவிடுத்து சிறு சிறு விடயங்களை முன் வைத்து அதனோடு நேரத்தை செலவிட்டால், தமிழ் மக்களின் நிலைமை என்னாவது என்றாகிவிடும்.
உண்மையில் வடக்கு மாகாண சபையின் பணியில் பெரும்பகுதி வடக்கு மாகாண மக்களின் பொருளாதார அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி என்பனவாகவே இருக்க வேண்டும். ஆனால் அவற்றின் மீது காணப்படும் அக்கறைப்பாடுகள் போதாமல் உள்ளமை பெருங் குறைபாடாகும்.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது தமிழ் மக்கள் அதில் பங்கேற்று வாக்களித்த ஆர்வம் கண்டு அதிசயிக்காதவர் இல்லையென்று சொல்லலாம்.
ஆனால் ஆர்வத்தோடு வாக்களித்து தமிழ் அரசை வடக்கில் நிலைநிறுத்திய போதிலும் அதில் எந்த நன்மையும் ஏற்படவில்லை என்று மக்கள் நினைக்கும் அளவில் நிலைமை வந்து விட்டது.
இத்தகைய சூழ்நிலை சாதாரண பிரதேச சபைகள் போலவே மாகாண சபையும் என்றாகிவிடும்.
உண்மையில் தமிழர் தாயகத்தில் இருக்கக் கூடிய உள்ளூராட்சி சபைகளை பொறுப்பேற்ற ஆட்சித்தரப்பினர் அவற்றை முழுமையாக பழுதாக்கி விட்டனர். இதனால் பிரதேச, நகர, மாநகர சபைகள் அதிகாரிகள் மட்டத்தில் இயங்கினாலே அது போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
இந்த நினைப்புக் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுடன் அதில் பங்கேற்கவும் முன்வர மறுக்கின்றனர்.
இதற்குக் காரணம் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை நிர்வாகம் ஆரோக்கியமாக எதனையும் செய்யாமையாகும்.
எனவே, உள்ளூராட்சி சபைபோன்ற ஒரு தோற்றப்பாட்டை வடக்கு மாகாண சபையிலும் கொண்டு வந்தால் தமிழருக்கான உரிமை என்பது எதுவுமாகாது என்றாகிவிடும். எனவே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.
– வலம்புரி.