ரவிராஜ் கொலை வழக்கு விசாரிக்கப்பட்ட முறை தவறு! – விக்னேஸ்வரன்

0
697

ரவிராஜ் கொலை வழக்கை ட்ரயல் அட் பார் முறையிலேயே விசாரித்திருக்க வேண்டும். விசேட ஜூரி களை அமர்த்தி இந்த வழக்கை விசாரித்திருக்கக் கூடாது என வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்தர் லொக்குவெல்ல முரகே லக் ஷ்மன் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு விஷேட ஜூரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு நடத்தப்படும் வழக்கில் ஒருவேளை ஜூரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அவர்கள் நடுநிலையினின்று தீர்ப்பளிக்காமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக பயந்து தீர்ப்பளிக்கும் வாய்ப்பு உள்ளது.
அத்துடன் ரவிராஜ் வழக்கில் நியமிக்கப்பட்ட விஷேட ஜூரிகள் அனைவரும் சிங்களவர்களே. அவர்களில் ஒருவர் கூட தமிழ் ஜூரி இல்லை. ஆனபடியால் ஜூரிகள் ஒருவேளை அடிபணிந்து தமது விருப்பத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கியிருந்திருக்கலாம்.
மேலும் ஜூரிகள், குறிப்பிட்ட நபர் குற்றவாளியா அல்லது சுற்றவாளியா என்றுதான் கூறுவார்களே தவிர தீர்ப்பு வழங்கியதற்கான காரணத்தை கூற மாட்டார்கள். ஒருவேளை தீர்ப்பை மீளவும் ஆராயும்படி யாராவது கேட்டால் மாத்திரம் தீர்ப்பை மீளாய்வு செய்வார்கள். குமாரபுரம் படுகொலைக்கு ஸ்ரீஸ்கந்தராஜா, தீர்ப்பை திரும்ப ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள் என்று கூறியதற்கு ஜூரிகள் குறுகிய ஒரு கால அவகாசத்தில் தீர்ப்பை ஆராய்ந்து பின்னர் இல்லை தீர்ப்பு சரியானது எனக் கூறிவிட்டனர்.
ஆகவே இவ்வழக்கை ட்ரையல் அட் பார் முறை மூலமே விசாரித்திருக்கவேண்டும். ட்ரையல் அட் பார் முறை என்று சொல்லப்படும்போது அங்கு மூன்று நீதிபதிகள் சாட்சிகளை விசாரித்து அதனடிப்படையில் தீர்ப்பளிக்கும் முறையாகும். அத்துடன் ட்ரையல் அட்பார் முறையில் தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூற வேண்டும். அதாவது, இந்த குற்றங்களைப் புரிந்தது நிரூபணமான காரணத்தினால் தான் நாங்கள் குறிப்பிட்ட நபரை குற்றவாளியாகக் காண்கின்றோம் என்று தீர்ப்பிற்கான விளக்கத்தையும் இறுதியில் கூற வேண்டும்.
இலங்கையில் இந்த முறையில் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக லியன ஆராச்சி வழக்கில் கூட நான் பதுளையில் இருந்து வரவழைக்கப்பட்டே வழக்கு விசாரிக்கப்பட்டது. நடராஜ் ரவிராஜ் கொலை வழக்கு ஒரு முக்கியமான வழக்கு. நடராஜா ரவிராஜ் தமிழ் மக்களுக்காக அளப்பரிய சேவைகளாற்றிய ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். அத்துடன், அவர் எனது மாணவரும் கூட . ஆகவே அவருடைய மரணம் அல்லது கொலை சம்பந்தமான வழக்கை ட்ரையல் அட்பார் முறையில் விசாரித்திருக்கலாம்.
இவ்வழக்கை மேன்முறையீடு செய்தால் தீர்ப்பில் சட்டப்படி ஏதும் தவறுகள் இருந்தால் அதை ஆராய்ந்து பார்த்து தவறுகளை புறந்தள்ளி இன்னொரு தடவை வழக்கை நடத்தச் சொல்வார்கள். அவ்வாறு வழக்கை மீள விசாரிக்கும்போது சாட்சிகள், சம்பந்தப்பட்டவர்கள் எவ்வாறான வேறு மனநிலையில் இருக்கக்கூடும். அவர்கள் பயமுறுத்தப்பட்டிருக்கலாம். அல்லது வெளிநாட்டிற்கு தப்பியோடியிருக்க ௬டும். இவ்வாறான போக்குகளால் இலங்கையின் நீதித்துறை ஒரு கேள்விக்குறியாக இருப்பதால்தான் இலங்கையில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கோருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here