முன்னாள் போராளியும் ஜனநாயக போராளிகள்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான இனியவன் என அழைக்கப்படும் தர்மசேன ரிசிகரன்(வயது-34) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போராளியாக இருந்து, புனர்வாழ்வின் பின் சாவகச்சேரி டச்சு வீதியில் குடும்பத்தினருடன் வசித்து வரும் ரிசிகரன் சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலைய வீதியில் வீடு ஒன்றில் ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கான அலுவலகம் ஒன்றினை உருவாக்கி வந்து ள்ளார்.
நேற்று இரவு குறித்த அலுவலகத்தின் காவலாளி இரவுக்கடமைக்காக சென்றபோது ரிசிகரன் அலுவலகம் அமைந்திருந்த வீட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முன்னாள் போராளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இறந்தவரின் மனைவி நீதவானிடம் தெரிவித்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முன்னாள் போராளியின் சடலத்தை சாவகச்சேரி பதில் நீதவான் பார்வையி ட்டார்.இதன்போதே தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உயிரிழந்தவரின் மனைவி சாவகச்சேரி நீதவான் நீதி மன்ற பதில் நீதவான் க.கணபதிப்பிளையிடம் தெரிவித்ததை தொடர்ந்து விரிவான விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குற்றத்தடயவியல் நிபுணர்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.