ஈழத்தமிழர்களின் சுதந்திர வாழ்வின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீச்சு தமிழர் தாயகத்தில் ஒளிப்பிளம்பாய் ஒளிபரப்பிவந்த நிலையில் ஆயுத மௌனிப்புடன் கனத்த இருள் சூழ்ந்துகொண்டது.
ஆயுதப் போராட்டத்தின் தோற்றுவாயாகத் திகழ்ந்த எல்லை தாண்டிய சிங்களக் குடியேற்றங்கள், இனரீதியிலான ஒடுக்குமுறைகள், இன அழிப்பு இராணுவத்தின் கொலைவெறியாட்டம் என்பன ஆயுத மௌனிப்பின் பின்னர் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தே வருகின்றது. அத்தோடு நடைபெற்ற இன அழிப்புக்கான பொறுப்புக் கூறலின் அடிப்படையிலான நீதியும் வல்லாதிக்க நாடுகளின் மேற்பார்வையில் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றது.
உலகம் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளில் எமக்கான நீதியை பெற்றுக்கொள்வதற்கான முன் முயற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். நியாய, தர்மத்தின் அடிப்படையில் எமக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தலாமே தவிர எந்த சக்தியாலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது.
சத்திய இலட்சியத்திற்காக மரணித்த மாவீரர்கள் மற்றும் தேச விடுதலைப் பயணத்தில் உடனிருந்து உயிர்துறந்த எமதருமை பொதுமக்களின் நல்லாசியுடனும், விடுதலை வேட்கையுடன் உலகெங்கும் வாழ்ந்துவரும் உலகத் தமிழர்களின் பேராதரவுடனும் புயல்வீச்சின் நிமிர்வாய் இவையனைத்தையும் முறியடித்து வெற்றிகாண்பது திண்ணம்.
ஈழத்தமிழர் வாழ்வில் கவிந்திருக்கும் கனத்த இருளகற்றி விடுதலை ஒளியேற்றும் ஆண்டாய் புலரும் ஆங்கிலப் புதுவருடம் ஒளிபரப்பும் என்ற நம்பிக்கையுடன் விடுதலைப் பணியாற்றுவோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!