தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவியான பேரிகை வாத்தியத்தை மீண்டும் பொது நிகழ்வில் அறிமுகப்படுத்தியிருக்கின்றது காரைநகர் பிரதேச செயலகம்.
தமிழர்களின் தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கும் செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த வாத்தியம் முழக்கப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை (2016.12.27) காரைநகர் பிரதேச செயலக கலாசார விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சுமார் ஐந்து அடி விட்டம் கொண்ட பேரிகை முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டனர்.
பேரிகை என்பது பழந்தமிழர்களின் வாத்தியங்களில் முக்கியத்துவம் பெற்றதாகும். குறிப்பாக தமிழ்நாட்டில் வாழ்ந்த மன்னர்கள் இதனை அதிகமாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
தமிழ் அரசர்களின் போர்ப் பிரகடனம், வெற்றிச் செய்திகள், அரச கட்டளைகள், ஊர்வலங்கள், திருமணச் செய்திகள் போன்றவற்றை மக்களுக்கு அறிவிப்பதற்கு இந்தப் பேரிகை பயன்படுத்தப்பட்டது.
முக்கியமாக, மன்னர்கள் தலைமையில் படைகள் போருக்குச் செல்லும்போது போர்ப் பேரிகை முழங்கப்பட்டது. போர் முடிந்து திரும்பும்போது வெற்றிப் பேரிகை முழங்கப்பட்டது.
அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகின் மேல் பாரிய பேரிகையை வைத்து முழக்குவார்கள். இந்தப் பேரிகையின் அடுத்த வடிவமாகவே முரசு என்ற வாத்தியம் உருவானது.
இத்தகைய பெருமை மிகுந்த தமிழர்களின் வாத்தியம் இன்று பயன்பாடற்று, வழக்கொழிந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில், காரைநகர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை அதனை தற்போது வெளிக்கொண்டு வந்திருக்கின்றது.
காரைநகரைச் சேர்ந்த கலைஞர் சின்னையா சோமசேகரம்பிள்ளை இந்த வாத்தியத்தை வடிவமைத்திருந்தார்.
காரைநகர் – மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய 2016 ஆம் ஆண்டு வருடாந்த மகோற்சவத்தின்போது வேட்டைத் திருவிழாவன்று இந்த வாத்தியம் முழங்க சுவாமி வேட்டைக்குச் சென்றார்.
பிரதேச செயலகத்தில் பேரிகை முழக்கத்துடன் கலாசார விழா ஆரம்பிக்கப்பட்டதை விருந்தினர்கள் பலரும் வரவேற்றுப் பேசினர்.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் இந்த வாத்தியத்தின் முக்கியத்துவத்தை புகழ்ந்துரைத்தார்.
இந்த வாத்தியத்தை வடிவமைத்த கலைஞருக்கு பிரதேச செயலகம் ‘கலைஞானச்சுடர்’ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.