தமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு இரண்டு முகங்களைக் காட்டக் கூடாது என்பதற்காகவே வட க்கில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் தான் பங்கேற்கவில்லை என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், நடக்கின்ற தற்கால நிலைமைகளை பார்த்தால் மக்கள் எழுச்சி கொள்கின்ற இதுபோன்ற போராட்டங்களில் நாமும் பங்கு பற்றும் தேவை எழலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எழுக தமிழ் பேரணியை நடத்தக்கூடாது என்றோ அதில் எவரும் பங்குபற்றக் கூடாது என்றோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி பேரெழுச்சியாக இடம்பெற்றுள்ள நிலையில் குறித்த பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் மட்டக்களப்பிலும் இடம்பெறவுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக சிறீதரன் எம்.பியிடம் சர்வதேச ஊடகமொன்று வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.இந்த ஆண்டு இறுதிக்குள் அரசாங்கத்துடன் அரசியலமைப்பு மற்றும் இனப்பிரச்சி னைக்கான தீர்வு உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து பேசிக்கொண்டிருப்பதால் அரசாங்கத்திற்கு ஒரு முகத்தையும் தமிழ் மக்களுக்கு மற்றுமொரு முகத்தையும் காட்ட முடியாது.
இந்த ஆண்டுக்குள் தீர்வைப் பெறுவதற்கான முயற்சியை தாங்கள் முன்னெடுத்து செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டதற்கமைய, இரண்டு முகங்களைக் காட்டக்கூடாது என்பதற்காகவே இந்த எழுக தமிழ் பேரணியில் நாம் பங்கேற்கவில்லை.
ஆனால் எழுக தமிழை நடத்தக்கூடாது என்றோ அதில் யாரும் பங்குபற்றக்கூடாதென்றோ நாங்கள் தடுக்கவில்லை.
எதுஎவ்வாறு இருப்பினும் எதிர்வரும் காலங்களில் அவ்வாறான விடயங்களில் நாங்கள் பங்குபற்ற வேண்டிய, தமிழர்கள் எழுச்சி கொள்கின்ற இதுபோன்ற போராட்டங்கள் இடம்பெற வேண்டிய தேவையும் எழலாம்.
அவ்வாறான போராட்டங்கள் மூலமே வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் மக்களுக்கான தீர்வை அடைவதற்கான சூழல் உருவாக்கப்படும் என்றால் அவ்வாறான போராட்டங்களுக்கான முயற்சிகளை ஏற்பாட்டுக்குழுவுடன் இணைந்து முன்னெடுக்க நாமும் தயார் எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி குறி த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலை ப்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது இதற்கு பதிலளித்த அவர், கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளமை குறித்து ஊடகங்கள் வாயிலாக அறி ந்துகொண்டோம்.
பேரணியை ஏற்பாடு செய்து வரும் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் தாம் சார்ந்த கட்சிகளை முன்னிலைப்படுத்தாது, அங்கு இடம்பெறும் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கான தமிழ் மக்கள் பேரவையினுடைய செயற்பாடாக மாத்திரம் இருந்தால் அது தொடர்பாக பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதன்போது குறிப்பிட்டார்.