அ.தி.மு.க பொதுச்செயலராக சசிகலா நியமனம்!

0
238

அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்.கட்சியின் பொதுக்குழு இதற்கு ஒப்புதல் அளித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பதவியை பொறுப்பேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் விடுத்த அழைப்பை ஏற்று அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமனம் ஆவதற்கு சசிகலா ஒப்புக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க பொதுக்குழுவிலும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை சசிகலாவிடம் தெரிவித்து அவரது சம்மதத்தை பெறுவதற்காக செல்கிறோம்” என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர்.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் இல்லம் சென்று சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை நேரில் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்தார்.

தீர்மான நகலைப் பெற்றுக் கொண்ட சசிகலா, ஆசி பெறும்விதமாக அந்த நகலை ஜெயலலிதா உருவப்படம் முன்னர் வைத்தார். அதன்போது அவர் கண்கலங்கினார்.

போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்தாக கூறினார்.

முன்னதாக, அ.தி.மு.க தலைமைப் பொறுப்பு வி.கே.சசிகலாவிடம் ஒப்படைக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்கப்பட்டது.

அ.தி.மு.கவை சசிகலா வழிநடத்துவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘ஜெயலலிதா மறைந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றவும், வழி நடத்தவும், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழுவின் ஒப்புதல்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Email Facebook Twitter Google+ Pinterest PrintFriendly     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here