திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின்மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றதாகவும் திருகோணமலை உட்துறைமுக வீதி கிழக்கு மாகாண சபை கட்டிட பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
தம்பலகாமம் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் போக்குவரத்துப் பிரிவிக் காவல்துறையினரால் முச்சக்கரவண்டியொன்று பின்தொடரப்பட்டுச் சென்றுள்ளது.
இதனையடுத்து குறித்த முச்சக்கரவண்டியானது நிறுத்தாது செல்ல காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு குறித்த முச்சக்கரவண்டிமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
பின்பு தொடர்ச்சியாக முச்சக்கரவண்டி நிறுத்தாமல் செல்ல பின்தொடர்ந்த காவல்துறையினர் குறித்த முச்சக்கரவண்டியை திருகோணமலை உட்துறைமுக பகுதியில் வைத்து சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.