நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் 11 விகாரைகள் புதிதாக முளைத்துள்ளன என்று வடக்கு மாகாண புள்ளி விவரக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் புதிதாக எந்தவொரு விகாரைகளும் கடந்த ஆண்டில் கட்டப்படவில்லை என்று வடக்கு மாகாண புள்ளி விவரக் கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், யாழ். மாவட்டச் செயலக புள்ளி விவரக் கையேட்டில் 3 விகாரைகள் கடந்த ஆண்டு கட்டப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ஆட்சிக் காலத்தில் வடக்கு மாகாணத்தில் 47 விகாரைகள் மாத்திரமே காணப்பட்டன. யாழ்ப்பாணத்தில் 4, கிளிநொச்சியில் 1, மன்னாரில் 8, முல்லைத்தீவில் 11, வவுனியாவில் 23 விகாரைகள் காணப்பட்டன. இந்நிலையில் முல்லைத்தீவில் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரமே மேற்படி 11 விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்லாட்சி அரசு அமைந்த பின்னர், 2015 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 58 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் 4 விகாரைகளும், கிளிநொச்சியில் ஒரு விகாரையும், மன்னாரில் 5 விகாரைகளும், முல்லைத்தீவில் 17 விகாரைகளும், வவுனியாவில் 31 விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புள்ளி விவரங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாக வடக்கு மாகாண புள்ளி விபரக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் யாழ். மாவட்டச் செயலக புள்ளி விபரக் கையேட்டில் 2015 ஆம் ஆண்டு 7 விகாரைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு மாகாண புள்ளி விபரக் கையேட்டில், யாழ். மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு 4 விகாரைகள் மாத்திரமே காணப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.