ஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் சம்மதம் தெரிவித்து விட்டார். சமஷ்டியைக் கைவிட்டுவிட்டார் என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்தது அமைச்சர் அமரவீர மட்டு மல்ல ஏற்கெனவே, இரண்டு அமைச்சர்கள் சம்பந்தர் சமஷ்டியைக் கைவிட்டு விட்டார் என வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.
கூடவே பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கு வதற்கும் சம்பந்தர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் அமரவீரவின் வாக்குமூலம் கூறுகிறது.
யார் என்ன கூறினாலும் இரா.சம்பந்தன் அவர் கள் மெளனமாகவே இருப்பார் என்பதும் உண்மை.
இது ஒரு புறம் இருக்க, விடுதலைப் புலிகளின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் கூட்டமைப் புக்கு வாக்களிக்க, அவர்கள் பாராளுமன்ற ஆசன ங்களைப் பெற்றுக் கொண்டனர்.
பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றதும் கூட்டமைப்பு என்ற அமைப்பை மெல்லக் கைவிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதாக களநிலைமை மாற்றப்பட்டது.
இப்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பதையும் கடந்து இரண்டு பேர் தீர்மானித்தல் என்ற நிலை மைக்கு தமிழ் அரசியல் தலைமை உள்ளது.
தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்தால் நாம் எதையும் தீர்மானிக்க முடியும் என்ற நிலைப்பாட்டில் இரா. சம்பந்தர் தரப்பு இருப்பதுதான் மிகப்பெரும் அபத்தம்.
தமிழ் மக்களின் வாக்களிப்பு என்பது தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் நடைபெற்றது.
எனவே தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் பாராளுமன்ற ஆசனத்தை பெற்றவர்கள் தேர்தலின் போது தாம் வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.
இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை தேர்தல் விஞ்ஞாபனத்தை எல்லாம் மறந்து ஒற்றையாட்சிக்கு இணக்கம் தெரிவித்ததுடன் பெளத்த மதத்தை முன்னுரிமைப்படுத்துவதற்கும் உடன்பட்டுள்ளது என அமைச்சர்களால் கூறப்படுகிறது.
இதனடிப்படையிலேயே இரா.சம்பந்தன் சிறந்ததொரு ஜனநாயகவாதி என்றும் சம்பந்தர் போன்ற தலைவர் இருக்கும் போது இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட வேண்டும் என்றும் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர்.
ஆக, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களுக்கு எந்த உரிமையையும் தராமல் வெறும் சப்புச்சவலையாக அமையப் போவது உறுதி.
தன்னுடைய காலத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விடவேண்டும் என்பதற்காக எல்லாவற் றையும் விட்டுக் கொடுத்து விட்டால் தமிழ் மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதை சம்பந்தர் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
தவிர, எத்தனையோ தியாகங்களை தந்துபோன எங்கள் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளுக்கு நாம் சமாதி கட்டுவோமாயின் அது அவர்களுக்கான தல்ல நமக்கானது என்பதையும் புரிதல் அவசியம்.
எதுவாயினும் தமிழ் மக்களுக்கான உரிமை என்பதில் தனித்து சம்பந்தர் மட்டும் முடிவு செய்வதென்பது ஒரு போதும் சாத்தியப்படாத விடயம்.
தமக்கான தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும். ஆகையால் தமிழ்மக்களின் கருத்துக்கள் அறியாமல் அவர்களின் ஆலோசனைப் பெறாமல் ஒற்றையாட்சி என்றும் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்றும் சம்பந்தர் உடன்படுவது தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் செயலாகும்.
இது தொடர்பில் தமிழ்மக்கள் விழிப்புடன் இருப்பது என்பது மிகமிக அவசியம்.
valampuri.