எளிதில் மறந்திருக்க முடியாத ஆழிப்பேரலை!

0
410

12 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ருத்ர தாண்டவம் ஆடிய சுனாமி எனும் ஆழிப்பேரலையை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.

அதுவரை, துள்ளிக்குதித்து வரும் கடல் அலையையும், கரையோடு மோதும் போது எழும் ஓசையையும் ரசித்து வந்த நமக்கு, கடல் அலையும் ஒரு நாள் ஆபத்தை ஏற்படுத்தும் என்று உணர்த்திய நாள் தான் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26. அன்று காலை இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டு, அதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை விஸ்வரூபம் எடுத்து, பயங்கர வேகத்துடன் கடலோர நகரம், கிராமம் என்று வித்தியாசம் பாராமல் உள்ளே புகுந்தது.

ராட்சத அலைகளால், கடற்கரையில் நின்றவர்கள், கடலோர கிராமங்களில் வசித்தவர்கள் என வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த கோர சம்பவத்தில் இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஆயிரம் பேர் மாண்டனர். குவியல் குவியலாக கிடந்த பிணங்கள் ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அன்று கேட்ட மரண ஓலம் 12 ஆண்டுகளுக்கு பிறகும் கடற்கரையோர கிராமங்களில் இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்று மாண்ட குழந்தைகள் உயிரோடு இருந்திருந்தால், இன்று இளைஞராக வலம் வந்து கொண்டிருப்பார்கள். அன்று இளைஞராக இறந்து போனவர்கள் இருந்திருந்தால், இன்று திருமணமாகி பிள்ளைகள் பெற்று குடும்பத் தலைவராக வாழ்ந்திருப்பார்கள். அன்று குடும்ப தலைவராக மரித்தவர்கள் இருந்திருந்தால், இன்று பிள்ளைகளுக்கு திருமணம் செய்துவைத்து பேரன்-பேத்திகளை கையில் எடுத்திருப்பார்கள்.

இப்படி எத்தனையோ ஆசைகளுடன் அன்று கரைந்து போனவர்களின், மிச்ச மீதி குடும்பங்களின் இன்றைய நிலை தான் என்ன?. சிதிலமடைந்த இடங்கள் கூட, சுனாமி ஏற்படுத்திய சுவடு தெரியாமல் மீண்டும் உயிர்பெற்றுவிட்டன.

ஆனால், உயிர்களை பலிக்கொடுத்த மக்கள் உள்ளங்களில் ரணமாக இருக்கும் காயம் இன்னும் ஆறாமல் அப்படியேத்தான் இருக்கிறது. அதற்கான மருந்து காலத்திடம் தான் உள்ளது. காலம் கடந்து போக… போக… இந்த காயமும் ஆறட்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். இனியும் இதுபோல் இயற்கை பேரிடர் ஒன்றும் ஏற்பட வேண்டாம் என்றும் வேண்டுவோம்.
– இராஜேஷ் ராஜூ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here