வடபகுதி காடுகளில் இராணுவம் கூகுள் படங்கள் மூலம் காடழிப்பு அம்பலம் – முதலமைச்சர்

0
128

வடமாகாணத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஸ்ரீலங்கா இராணுவம் தங்கியிருப்பதனால், குறித்த வனப்பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவை அழிவடைந்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

காட்டுப்பிரதேசங்களின் நடுவே பாரிய இடைவெளி காணப்படுகின்றமை கூகுள் படங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான 2016 ஆம் ஆண்டின் இறுதி மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் பங்கேற்று இணைதலைமை உரை நிகழ்த்தும் போதே வடமாகாண முதலமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கத்துடன் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வடபகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது வடமாகாணத்திற்கான பொருளாதார தேவைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பாரிய செயற்றிட்டங்களால் மக்கள் பயனடைவார்கள் என்ற தத்துவத்தை மாற்றி சிறுமத்திய கைத்தொழில்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன் தேவையற்ற வௌிமாகாண உள்ளீடல்களைக் குறைக்க முடியும் எனவும், மக்கள் பெருவாரியாக இங்கு தங்கி நெருக்கடிகளுக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும் எனவும் நீர்ப்பாவனை, மின்சாரம், வடிகால், கழிவகற்றல் போன்றனவற்றை திறமையுடன் நிர்வகிக்க முடியும் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சந்திப்பின்போது ஒண்றிணைந்த குரலில் அனைவரதும் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்றும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

வடபகுதி நிலங்கள் சூறையாடப்பட்டு வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சுண்டிக்குளத்தில் மத்திய அரசாங்கத்தின் உள்ளீடுகள் சுற்றுச்சூழலுக்கு அனுசரணையாக இல்லை என்று முறையிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வனப்பகுதிகளில் இராணுவத்தினர் பாரியளவான காணிகளை கையகப்படுத்தியிருப்பதனால், வனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வனங்களின் நடுவில் பல இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை கூகுள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், வடபகுதி வளங்கள் தெற்கிற்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here