பிரித்தானியாவில் கேணல் கிட்டு உட்பட 10 வீர மறவர்களின் நினைவெழுச்சி நாள்!

0
157

kddiu_anna copyகேணல் கிட்டு உட்பட 10 வீர மறவர்களின் இருபத்திரண்டாம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்ச்சி தென் மேற்கு லண்டன் south Wimbledon,Merton hall இல் நேற்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில்  நடைபெற்றது.

தமிழீழம் நோக்கி வங்கக் கடல் வழியாக உலகக் கடற் பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த கேணல் கிட்டு உட்படப் பத்து வீரமறவர்கள் இந்தியக்கடற்படையினரால்  வழி மறிக்கப்பட்டனர். இந்திய வல்லாதிக்கப் படையினர்  இவ்வீர மறவர்களைத் தமது  கடல் எல்லைக்குக் கொண்டு சென்று கைது செய்ய முற்பட்ட வேளை , வல்லாதிக்க அரசிடம் சரணடையாமல் உலகக் கடற்பரப்பில் நின்றவாறே 1993ஆம் ஆண்டு ஜனவரித்திங்கள்  16ஆம் நாள் கேணல் கிட்டு அவர்களும் ஏனைய ஒன்பது போராளிகளும் தம் இன்னுயிரை ஈகம் செய்தனர்.
மேற்குலகத்துடன் மேற்கொள்ளப்பட்ட  சமாதான முயற்சிகளின் முக்கிய விடயங்கள் பற்றித் தேசியத் தலைமையுடன் கலந்தாலோசிக்கச் சென்ற வேளையிலேயே இவ்வல்லாதிக்க சுற்றிவளைப்பு இடம்பெற்றது.கொண்ட கொள்கையில் உறுதியுடன் நின்ற கேணல் கிட்டு அவர்களுடன் லெப்டினன்ட் கேணல் குட்டிசிறி, மேஜர் மலரவன் அல்லது வேலவன், லெப்டினன்ட் நல்லவன், லெப்டினன்ட் அமுதன், கப்டன் தூயவன், கப்டன் நாயகன், கப்டன் ரொசான், கப்டன் குணசீலன், கப்டன் ஜீவா ஆகிய பத்து வீர மறவர்களும் ஆதிக்கப் பொறியில் அகப்படாமல் வீர வளாறு படைத்தனர்.
இப்பத்து வீர மறவர்களையும் நினைவு கூர்ந்து பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினவெழுச்சி நிகழ்ச்சியில் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் திரு உதயனன்  அவர்கள் பொதுச் சுடரேற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியைப்  பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தென்மேற்கு லண்டன் ஒருங்கிணைப்பாளர் திரு நவம் அவர்கள் ஏற்றினார் . ஈகச் சுடரினை மணலாற்றில் வீரச்சாவடைந்த எழில்வேந்தன் என்றழைக்கப்பட்ட வீரவேங்கை தர்சனின் சகோதரி திருமதி எழிலரசி மனோகரன்  ஏற்றினார்.
ஊடகவியலாளர் கோபி ரத்தினம் அவர்களினதும் ,  பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் நியூட்டன் அவர்களினதும் உரையும் வேல்தர்மா அவர்களின் கவிதையும் பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் கலை பண்பாட்டுக் கழகத்தினரின் அவைக்காற்றுகையும் மற்றும்  நடன நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றன.நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இருப்பினும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் மக்கள் பெருந் தொகையாகக் கலந்து கொண்டு  சமகால மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் பற்றிக் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுடன் தமிழீழ விடுதலை நோக்கிய நகர்வைப் பலப்படுத்த ஒன்றுபட்டுப்  பாடுபட வேண்டும் எனவும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here