யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதி குளப்பிட்டிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் யாழ். காங்கேசன்துறை வீதி கொக்குவில் – குளப்பிட்டிப் பகுதியினால் இரவு வேளை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த 5 பொலிஸ் அதிகாரிகள், அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்ததுடன் இச் சம்பவம் தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
இதன்படி நீதிமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணையானது நேற்றைய தினம் மீண்டும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்கள் 5 பேரும் மன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இக் கொலை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியும் மன்றில் ஆஜரானார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனது அறிவுறுத்தலுக்கமைய சட்டத்தரணி தி.கணா தீபன் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றில் குறித்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தார்